Skip to main content

மாணவியர்களின் எதிர்காலத்தை  கேள்விக்குறியாக்குவது தான் அரசின் சாதனையா? - டிடிவி தினகரன்

Published on 06/11/2024 | Edited on 06/11/2024
ttv dhinakaran To fill the vacant post of Principal in Government Schools

அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? என அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தமிழகத்தில் 2500 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் இயங்குவதாக புகார் - அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டு காலமாக 2,500 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லாமல் இயங்கிவருவதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே கலந்தாய்வின் மூலம் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக இருக்கும் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டிய பள்ளிக்கல்வித்துறை, அதனைச் செய்ய தவறியதால் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வித்தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி வாரியாக அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் குறித்தும் மேம்படுத்த வேண்டிய வசதிகள் குறித்தும் ஆய்வு செய்வதாகச் சொல்லிக்கொள்ளும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது ஏன்? என ஆசிரியர் சங்கங்கள் கேள்வி எழுப்புகின்றன.

எனவே, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக இருக்கும் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்