
பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசன் இன்று காஞ்சிபுரத்தில் சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், டி.டி.எஃப். வாசன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி இன்று சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது வாகனம், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, தனது வாகனத்தில் வீலீங் செய்ய முயற்சி செய்துள்ளார்.
அப்போது அவரது வாகனம் அவரது கட்டுப்பாட்டை மீறி சாலையில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டார். இதில், டி.டி.எஃப். வாசன் சாலையோரம் இருக்கும் புதரில் தூக்கி வீசப்பட்டார். விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். எலும்பு முறிவுக்கு கையில் கட்டு போடப்பட்டுள்ளது.
டி.டி.எஃப். வாசனின் ஆபத்தான மற்றும் அதிவேகமான வாகன சாகசத்தினால், பல இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் என்ற விமர்சனமும் அவர் மீது உள்ளது. இந்நிலையில், அவர் விபத்தில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் விபத்தில் சிக்கிய வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது.