Skip to main content

பட்டப்பகலில் கொள்ளை அடிக்க முயற்சி! பொதுமக்களால் தப்பிய பண மூட்டை! 

Published on 18/09/2021 | Edited on 18/09/2021

 

Trying to rob in kallakurichi Bundle of money escaped by the public!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சிப் பகுதியில் உள்ள பாத்திமா நகரில் வசித்துவருபவர் அன்பழகன். இவர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆவண எழுத்தராக வேலை பார்த்துவருகிறார். நேற்று (17.09.2021) இவருடைய தாய் காசியம்மாள், அவரது மனைவி, பிள்ளைகள் என அனைவரும் விருத்தாசலம் அருகில் உள்ள உறவினர் ஊருக்கு ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள புறப்பட்டனர். அதனால், காலையிலேயே வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். 

 

இந்நிலையில், மதியம் 2 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர், அன்பழகன் வீட்டு முன்பக்க பூட்டை உடைத்து கதவைத் திறந்து வீட்டுக்குள்ளே செல்வதை அக்கம் பக்கம் உள்ளவர்கள் தற்செயலாகப் பார்த்துள்ளனர். மேலும் அவர்கள், அன்பழகன் வீட்டுக்குள் சென்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை மறைந்திருந்து பார்த்துள்ளனர். அப்போது, அன்பழகன் வீட்டிலிருந்த பணத்தை ஒரு பையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர் அந்தக் கொள்ளையர்கள். 

 

அதனைக் கண்ட அப்பகுதி மக்கள், அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது, கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு, அங்கிருந்த காம்பவுண்டு சுவர் மீது ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களைப் பொதுமக்கள் துரத்தியதால் பணப்பையைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். இதுகுறித்த தகவலை உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்குத் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த இன்ஸ்பெக்டர் ராஜா, சப் இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் உள்ளிட்ட போலீசார் சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு விசாரணை செய்தனர். 

 

கொள்ளையர்கள் போட்டுவிட்டுச் சென்ற அந்தப் பையில் அறுபதாயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது. அதை உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார், கொள்ளையர்கள், கொள்ளையடிக்க வரும்போது பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும், அவர்கள் கொண்டுவந்த இரும்பு ராடு ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். மேலும், போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்து அதன் மூலம் கொள்ளையர்களைப் பிடிப்பதற்கு தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்