புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி கிராமத்தில் உள்ள குடிதண்ணீர் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு கொடுக்கப்படும் குடிதண்ணீர் செம்மண் கலந்த மழைத் தண்ணீர் போல இருப்பதால் ஒரு வருடமாக ஒவ்வொரு அதிகாரியாக பார்த்து முறையிட்ட தம்பதி இன்று ஒன்றிய அதிகாரிகளிடம் நினைவூட்டல் மனு கொடுக்க கலங்கிய தண்ணீருடன் வந்தால் அதிகாரிகள் இல்லை. அதனால் அந்த தம்பதி ஒவ்வொரு அலுவலகமாக அலைந்து கடைசியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் முறையிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து செம்பட்டிவிடுதி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பாதை ராமதாஸ் மற்றும் அவரது மனைவி ராஜகுமாரி ஆகியோர்.. அமைச்சரிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்து விட்டு வெளியே வந்து..
எங்கள் கிராமம் கல்பூமி. அதனால் குடிநீருக்குச் சிரமப்பட்டு வருகிறோம். ஊராட்சியின் சார்பில் அதற்காக ஆழ்குழாய்க்கிணறு அமைத்து அதிலிருந்து 60 - ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நிரப்பி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஓராண்டாக செம்மண் கலரில் சாக்கடை நீரைப்போல் கலங்கலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதை மாற்றி சுத்தப்படுத்தி மாற்று ஏற்பாடு செய்து பாதுகாப்பான குடிநீர் வழங்க பலமுறை கோரிக்கை வைத்தும். எந்த அதிகாரியும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
இப்போதும் காலையில் இருந்து ஊராட்சி செயலரிடம் மனு கொடுக்க சென்றால் அவர் அங்கு இல்லை. புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலரைத் தேடிச் சென்றால் அவர்களும் இல்லை.
அப்பதான் மக்கள் நல்வழ்வுத்துறை அமைச்சர் புதுக்கோட்டையில் வேறொரு நிகழ்ச்சிக்காக வந்திருப்பது தெரிந்து அங்கே போய் புகார் மனுவைக் கொடுத்து பாட்டிலில் நாங்கள் கொண்டு வந்த அந்தத் தண்ணீரையும் காட்டினோம். அந்த தண்ணீரைப் பார்த்தவர்கள் எல்லாம் இந்த நீரையா குடிக்கப் பயன் படுத்துகிறீர்கள் என்று வியப்புடன் பார்க்கிறார்கள். அதனை வடிகட்டி காய்ச்சி அப்புறம்தான் குடிக்க வேண்டியிருக்கிறது.
ஆனால் அந்தத் தண்ணீரால் தான் இந்த மக்களுக்கு நோய் வருகிறது என்ற காரணத்தை மருத்துவர்கள் பலரும் சொல்லி பயமுறுத்துவதால் அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்வதற்காகத்தான் தண்ணீரோடு வந்தோம் என்றனர். தொடர்ந்து மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததோடு ஊராட்சிகள் திட்ட இயக்குனர் முருகனை போனில் தொடர்பு கொண்டு இந்த ஆழ்குழாயில் பைப் இறக்கியிருக்க மாட்டார்கள் போல் தெரிகிறது. அதனால் அதற்கு என்ன மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமோ அதை உடனே செய்ய வேண்டும், அல்லது வேறு ஆழ்குழாய்க் கிணறு அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன் பிறகு.. அதிகாரிகளை சம்மந்தப்பட்ட இடத்திற்குச் சென்று பார்வையிட்டு விரைவில் நல்லதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதரா அமைச்சர் மாவட்டத்தில் சுகாதராமில்லாத தண்ணீரை குடிக்கும் மக்களுக்கு நல்ல குடிதண்ணீர் எப்போது கிடைக்கும்?