‘வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்; ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்.’ எனச்சொல்வது, சிறைவாசத்துக்குப் பிந்தைய நிர்மலாதேவியின் வாழ்க்கைப் பயணத்துக்கு வெகுவாகப் பொருந்திப்போகிறது.
மதுரை மத்திய சிறையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, போலீஸ் வாகனத்தில் நிர்மலாதேவியை அழைத்துவரும் போதெல்லாம் பாதுகாப்பு கெடுபிடிகள் கடுமையாக இருந்தன. மீடியாக்கள் யாரும் அவரைப் படம் பிடித்து பேட்டி எடுத்துவிடக்கூடாது என்பதில் காக்கிகள் குறியாக இருந்தனர். அதனாலோ என்னவோ, பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் எந்த வழியாக அவரை அழைத்து வருவார்கள்? என்பதை அறிந்திட முடியாமல், எல்லாத் திசைகளிலும் விழிப்புடன் காத்திருந்தார்கள்.
மேலிட உத்தரவின் காரணமாக, அப்போது பொத்திப் பொத்தி வைக்கப்பட்டார் நிர்மலாதேவி. பிணையில் வெளிவந்தபிறகு நிலைமை தலைகீழாகிவிட்டது. வழக்கமாக காரில் வரும் அவர், இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள அவருடைய வீட்டிலிருந்து தனியாகப் பேருந்தில் பயணித்தே வந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் வளாகத்தில் அவர் நடந்துவந்தபோது, நாய் ஒன்று குறுக்கிட்டது. ‘எதற்குமே அஞ்சமாட்டேன்’ என்பதுபோல், அந்த நாயைக் கடந்து சென்றார்.
வழக்கு வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலிருந்து கிளம்பினார். “பத்திரிக்கையாளர்களிடம் பேசுவதற்குத் தடை இருக்கிறதே! நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்பட்டு ஆகவேண்டுமே!” என்றார் விரக்தியுடன். கணவர் மற்றும் இரு பெண் குழந்தைகளின் பாச உறவுக்கு ஏங்கித் தவிக்கும் அவருக்கு, இன்று வரையிலும் அது கிடைக்கவில்லை. வேறு எந்த உறவும் துணைக்கு வராததால்தான், நீதிமன்றத்துக்குத் தனி ஆளாக வந்திருக்கிறார்.
வழக்கறிஞர் நண்பர் ஒருவர் நம்மிடம் “பயணத்தின்போது பப்ளிக் டிஸ்டர்பன்ஸ் எதுவும் அவருக்கு வரக்கூடாதே!” என்று வருத்தத்தை வெளிப்படுத்த, சத்தமில்லாமல் பின் தொடர்ந்தோம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிவகாசி நகரப் பேருந்தில் ஏறினார் நிர்மலாதேவி. பயணிகள் அதிகமாக இருந்ததால், சீட் கிடைக்கவில்லை. நின்றுகொண்டே பயணம் செய்த அவருக்கு, சிவகாசி ரிசர்வ் லைன் பேருந்து நிறுத்தத்தில்தான் சீட் கிடைத்தது. சிவகாசியிலிருந்து மதுரைப் பேருந்தில் ஏறி, விருதுநகரில் இறங்கினார். அங்கிருந்து அருப்புக்கோட்டை பேருந்தில் ஏறி, புது பேருந்து நிலையத்தில் இறங்கினார். அங்கு வாகனக் காப்பகத்திலிருந்த தன்னுடைய டூ வீலரை எடுத்துக்கொண்டு, அருப்புக்கோட்டையில் உள்ள தன் வீட்டுக்குச் சென்றார்.
விருதுநகரில் நிர்மலாதேவி கரும்புச்சாறு குடித்தபோது ஒருவர், “நிர்மலாதேவி போல தெரியுதே!” என்றார் அருகிலிருந்த தன் நண்பரிடம். சேனல்கள் மற்றும் பத்திரிக்கைகள் மூலம் தொடர்ந்து செய்தியில் அடிபட்டு பிரபலமானாலும், பேருந்து பயணத்தின்போது யாருமே நிர்மலாதேவியைக் கண்டுகொள்ளவில்லை.
கல்லூரிப் பேராசிரியரான நிர்மலாதேவி, தற்போதைய வாழ்க்கைச்சூழல் மூலம், இச்சமூகத்துக்குத் தானே ஒரு பாடமாகி இருக்கிறார்.