மாநில எல்லைகளில் உள்ள ஆர்.டி.ஓ. சோதனைச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா, டிச. 18ம் தேதி, சேலத்தில் ஊடகத்தினரைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வந்ததில் இருந்து, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாநில எல்லைகளில் போக்குவரத்துத் துறை (ஆர்டிஓ) கட்டுப்பாட்டில் உள்ள 1924 சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டன. ஆனால், தென்னிந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் மட்டும் அகற்றப்படாமல் உள்ளன. இதனால் ஓசூர் அத்திப்பள்ளி சோதனைச் சாவடியில் இருந்து மத்திய பிரதேசத்திற்கு சரக்கு லாரிகள் செல்ல வேண்டுமெனில், வழியில் 3 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் கொடுக்க வேண்டியுள்ளது.
பா.ஜ.க. ஆட்சியில் உள்ள 14 மாநிலங்களில் இத்தகைய சோதனைச் சாவடிகள் இல்லை. மற்ற மாநிலங்களில் உள்ளவற்றை அகற்ற வேண்டும் என்று கோரியும், இதுவரை அகற்றப்படவில்லை. எனவே, டிச. 25ம் தேதி முதல் மாநில எல்லைகளில் உள்ள ஆர்.டி.ஓ. சோதனைச் சாவடிகளில் பணம் செலுத்துவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். இதையும் மீறி பணம் கேட்டு கட்டாயப்படுத்தினால், லாரிகளை அங்கேயே நிறுத்திவிட்டு தகவல் தெரிவிக்கும்படி ஓட்டுநர்களிடம் அறிவுறுத்தி இருக்கிறோம். உரிய ஆவணங்கள் இருந்தால், லாரிகளை நிறுத்தி அதிகாரிகள் பணம் கேட்கக்கூடாது.
இந்தப் பிரச்சனையை கையில் எடுத்தது முதல், லாரிகள் மீது ஆன்லைன் மூலம் வழக்குப்பதிவு செய்வது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகள் உட்பட நாடு முழுவதும் 114 சாவடிகள் காலாவதியாகி விட்டன. அந்த சுங்கச்சாவடிகளில் பராமரிப்புக் கட்டணம் 40 சதவீதம்தான் வசூலிக்க வேண்டும். ஆனால் அங்கு முழு கட்டணம் வசூலிக்கின்றனர். ஓராண்டுக்கான சுங்கக் கட்டணத்தை, ஒரே தவணையாக மொத்தமாக செலுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரியும், மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் ஜனவரி மாதம் இந்திய அளவில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். தமிழகத்தில் டீசல் விலை அதிகம் என்பதால், கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்குச் சென்று எரிபொருள் நிரப்புகிறோம். இதனால் தமிழக அரசுக்கு நாளொன்றுக்கு 4 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து தமிழக முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த பேட்டியின்போது, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் தனராஜ், சேலம் மாவட்டச் செயலாளர் குமார், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.