லாரி மோதி விபத்து: தந்தையுடன் பைக்கில் சென்ற
பயிற்சி பெண் மருத்துவர் பலி..!
நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தைச் சேர்ந்த வக்கீல் பொம்மன் (வயது-55). இவரது மகள் கீர்த்தனா(வயது-24). இவர், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
கடந்த சில நாளாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த கீர்த்தனா விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்கு செல்ல முடிவு செய்துள்ளார். இதையடுத்து, நேற்று மதியம் தனது விடுமுறை கடிதத்தை உயர் அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு ஊருக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.
நேற்று மாலை கீர்த்தனாவின் தந்தை பொம்மன், ஹாண்டா ஆக்டிவா பைக்கில் இராசிபுரத்தில் இருந்து தருமபுரி சென்றவர், அங்கிருந்து மகளை அழைத்துக்கொண்டு ஊருக்கு புறப்பட்டார்.
நேற்று இரவு, 7:30 மணியளவில் இவர்கள் சேலம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில், மல்லூர் அருகிலுள்ள பொய்மான் கரடு என்ற இடத்தின் அருகே சென்றுகொண்டிருந்த நேரத்தில் டெல்லியில் இருந்து, மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி பொம்மன் சென்ற பைக்கின் பின்புறம் மோதியது.
அதில், பொம்மன் மற்றும் கீர்த்தனா இருவரும் வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில், லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி, கீர்த்தனா உயிரிழந்தார். படுகாயமடைந்த நிலையில் இருந்த பொம்மன், அங்கிருந்த பொதுமக்களால் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பெ.சிவசுப்பிரமணியம்