புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் வடக்கு கிராமத்தில் உள்ள சன்னாசியார் கோவில் அப்பகுதி மக்களின் குலதெய்வமாக உள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை உட்பட பல மாவட்டங்களிலும் இந்த சன்னாசியாரை குலதெய்வமாக வணங்கும் மக்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். பொதுமக்களின் பங்களிப்புடன் வனப்பகுதியில் உள்ள சன்னாசியார் கோவில் மரங்களுக்கு சேதமின்றி திருப்பணிகள் முடிந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடமுழுக்கு நடத்தப்பட்டது.
குடமுழுக்கு நடந்த சிலநாட்களில் கோவில் உள்ளே இருந்த இரும்பு உண்டியல் பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த பக்தர்கள் காணிக்கையாக போட்ட பணம் காணாமல் போயிருந்தது. 2 பூட்டுகளும் அதிக சேதாரமின்றி உடைந்து கிடந்தது. பணத்தை திருடியவர்கள் கொண்டு வந்து போடுவார்கள் என்று கோவில் நிர்வாகிகளும் அந்தப்பகுதி மக்களும் காத்திருந்தனர். ஆனால் திருட்டு போன உண்டியல் பணம் வரவில்லை. 48 நாட்கள் மண்டலாபிஷேகம் வரை காத்திருந்தும் பணம் திரும்ப வரவில்லை என்பதால் கோவில் நிர்வாகிகள் அப்பகுதி மக்கள் இணைந்து உண்டியல் உடைத்து திருடியவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
அந்த முடிவின்படி சிட்டங்காடு பூசாரி நடராஜன் மூலம் முக்காலியை கொண்டு வந்து திருட்டைக் கண்டுபிடிக்க முடிவெடுத்து புதிய முக்காலி வாகை மரத்தில் கொத்தமங்கலம் தச்சர் மூலம் தயாரானது. வெள்ளிக்கிழமை முக்காலி கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு தனி அறையில் வைத்து இரவு பூஜைகள் செய்யப்பட்டது.சனிக்கிழமை காலை 6 மணிக்கு மீண்டும் பூஜைகள் செய்யப்பட்டது. இதனைக் காண பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வந்திருந்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறும் போது,இந்த உண்டியல் திருடியவர்களை முக்காலி காட்டிக் கொடுக்கும் என்று நம்புவதாக கூறினார்கள். முக்காலி இயக்கும் பூசாரி சிட்டங்காடு நடராஜன் நம்மிடம் பேசுகையில், 'இதுவரை ஏராளமான திருட்டுகளை கண்டுபிடித்து இருக்கிறோம். ராணுவ வீரர்களுக்கு சம்பளம் போட வைத்திருந்த பணம் திருடு போனதைக் கூட நான் இயக்கிய முக்காலி தான் கண்டுபிடித்தது. போலீஸ் வீட்ல திருடியதை கண்டுபிடிச்சு கொடுத்தேன். அதேபோல உண்டியல் திருட்டையும் கண்டுபிடிக்கும்'' என்றார்.