கரோனா தொற்று காரணமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கடந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய விழாக்களை மீண்டும் நடத்த இயலாது என்ற அறநிலையத்துறை வாதத்தை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
கரோனா பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டதால், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடத்தப்பட வேண்டிய விழாக்கள் நடைபெறவில்லை. அதனை நடத்துவது குறித்து முடிவெடுக்க மதத் தலைவர்கள் அடங்கிய குழுவை அமைக்கக் கோரி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, உயர் நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் – மதத் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டு, அதில் நிறுத்தப்பட்ட ஐந்து விழாக்களை நடத்த முடிவெடுத்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவுசெய்த நீதிபதிகள், விழாக்களை மரபுகளின்படி நடத்த கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.
இந்நிலையில், கோவில் விழாக்கள் நடத்த வேண்டிய காலம் முடிவடைந்து விட்டதாலும், பின்னர் நடத்த முடியாது என்பதாலும் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரி, அறநிலையத் துறை இணை ஆணையர் சார்பிலும், தலைமை பூசாரி சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, கரோனா தொற்று காரணமாக நடத்தப்படாத விழாக்களைக் கண்டிப்பாக நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை எனவும், ஏற்கனவே நடத்தப்பட வேண்டிய விழாக்களை இனிமேல் நடத்த முடியாது என மதத் தலைவர்களும், தலைமை அர்ச்சகரும் கூறுவதால் அதை ஏற்று இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தது.