திருச்சி ரயில்வே காவல் மாவட்டம் லால்குடி மேளவாளாடியில் ரயில் தண்டவாளத்தில் 2 டயர்களை மர்ம நபர்கள் சமீபத்தில் வைத்தனர். இதனால் நாகர்கோவில் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் டயரில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து திருச்சி ரயில்வே டி.எஸ்.பி பிரபாகரன் தலைமையில் தனிப்படை விசாரணை மேற்கொண்டு வந்தனர். சுமார் 30க்கும் மேற்பட்டோரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் திருச்சி மாவட்டம், மேலவாளாடியைச் சேர்ந்த வெங்கடேசன், பிரபாகரன், கார்த்திக் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் சுரங்க பாலம் சரியான இடத்தில் கட்டவில்லை, முறையாக சாலை வசதி இல்லை என்று அரசின் கவனத்தை ஈர்க்க இவ்வாறு செய்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருச்சி ரயில்வே டி.எஸ்.பி. பிரபாகரன் கூறுகையில், "தண்டவாளத்தில் டயர் வைத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீதும் ரயில் கவிழ்ப்பு அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்படும். ரயிலை கவிழ்க்கத் திட்டம் என்கிற அடிப்படையில் இவர்கள் மூன்று பேர் மீதும் கடுமையான தண்டனை, நடவடிக்கை இருக்கும். மேலும், ரயில் போக்குவரத்து என்பது வெகுஜன மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடியது. எனவே இதில் யாரேனும் கெட்ட எண்ணத்துடன் செயல்பட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மற்றும் திருச்சியில் கஞ்சா தடுப்பு வேட்டையில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் 764 கிலோ கஞ்சாவை கைப்பற்றி உள்ளோம். கஞ்சா வழக்கு தொடர்பாக இதுவரை 116 நபர்கள் வரை கைது செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.