சென்னை மண்ணடி மஸ்கான் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் திவான் அக்பர். வயது 45. ஸ்கிரீன் பிரி்ண்டிங் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த 17ம் தேதி திவான் அக்பரை ரூ.2 கோடி கேட்டு சிலர் கடத்தினர். போலீசில் புகார் சொல்லாமல் அவரது குடும்பத்தினர் பணத்தை கொடுத்து அவரை மீட்டனர்.
பின்னர் அவரது குடும்பத்தினர் முத்தியால் பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் தவ்பீக், அவரது நண்பர்கள் ஆல்பர்ட், உமாமகேஸ்வரன் ராஜா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதில் முக்கிய குற்றவாளியான தவ்பீக் 2008ம் ஆண்டு இறைவன் ஒருவனே என்கிற அமைப்பை தொடங்கி அதன் தலைவராக இருந்துள்ளார். அந்த நேரத்தில் மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பில் இருந்ததாக மகாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்ட தவ்பீக் ஜாமீனில் வெளியே வந்தார்.
அதன் பிறகு கடந்த 12ம் ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவர் பல இடங்களை மாற்றி மாற்றி பயணம் செய்துள்ளார். இந்த நிலையில கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வங்க தேசத்தை சேர்ந்த சல்மா என்பவரை தவ்பீக் காதலித்து திருமணம் செய்துள்ளார்.
சல்மா குறித்து போலீஸ் விசாரணை செய்ததில் 5 மாதங்களுக்கு முன்பு திருச்சி மணிகண்டம் பகுதியில் வாடகை வீட்டில் தவ்பீக் – சல்மா ஆகியோர் தங்கியிருப்பதாகவும் திவான் அக்பர் கடத்தல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட செல்போனில் பேசியதும், கண்டுபிடிக்கப்பட்டதால் சென்னை போலீசார் திருச்சியில் தங்கி சல்மா இருப்பிடம் குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் தான் சல்மா – தவ்பீக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சல்மா இந்தியாவில் தங்கியிருப்பதற்கான எந்த ஆவணமும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சல்மா மற்றும் அவரது இரண்டு வயது மகனுடன் கைது செய்து மருத்துவ பரிசோதனை முடித்து திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கு இடையில் சல்மா தங்குவதற்கு மணிகண்டம் பகுதியில் வீட்டை வாடகைக்கு கொடுத்த தவ்பீக் நண்பர் யாசிக் என்பவரை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து சென்று உள்ளனர்.