திருச்சி லலிதா ஜுவல்லரியில் இன்று அதிகாலை புகுந்த கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த, மாவட்ட கண்காணிப்பாளர் அமல்ராஜ், துணை ஆணையர்கள் நிஷா, மயில்வாகணன் ஆகியோர் காலை முதலே நகைக்கடையில் தீவிர சோதனை செய்தும், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் நகை கொள்ளையர்களை கண்டுப்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு பக்கம் நகைக்கடையில் இருந்த நகைகளை கணக்கெடுக்கும் பணியும் நடைபெற்று வந்தது. அப்போது லலிதா ஜுவல்லரியின் உரிமையாளர் கிரண்குமார், சம்பவம் நடந்த பகுதியில் ஆய்வு செய்தும், நகை மதிப்பீட்டை மேற்பார்வையிட்டார்.
அதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த கிரண்குமார், திருச்சி லலிதா ஜுவல்லரியில் சுமார் 13 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், வைர நகைகள், பிளாட்டினம் உள்ளிட்டவை கொள்ளை போனதாக கூறினார். மேலும் தரைத்தளத்தில் மட்டுமே நகைகள் கொள்ளை போனதாகவும், பக்காவாக பிளான் செய்து கொள்ளையடித்துள்ளனர். காவல்துறை அதிகாரிகள் காலை முதலே கடையில் ஆய்வு செய்து வருவதாகவும், விசாரணையில் திருப்தி உள்ளதாகவும், விரைவில் கொள்ளையர்களை காவல்துறையினர் கண்டுபிடித்து நகைகளை மீட்டு கொடுப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.