இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வரும் நிலையில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் கொரோனாவை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றன. அதில் திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தொற்று நோய் சிகிச்சை மையம் தனியாக தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சை மையத்தினை அரசு மருத்துவமனை டீன் நேரு இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "இந்த சிகிச்சை மையத்தில் தற்போது 40 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. மொத்தம் 330 ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது. 320 மருத்துவர்கள், 230 செவிலியர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் உள்ளனர்.
தற்போது திருச்சி மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினமும் 300க்கும் அதிகமானோர் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். நேற்று மட்டும் 371 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. அதில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது இந்த சிகிச்சை மையத்திற்கு உள்ளேயே ஆர்டி பிசிஆர் சோதனை செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா தொற்றை எதிர்கொள்ள திருச்சி அரசு மருத்துவமனை தயார் நிலையில் உள்ளதாக" கூறினார். மேலும் போதுமான மருந்துகள் கையிருப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.