பிறக்கும்போதே சில குழந்தைகளுக்கு இருக்கும் இருதய நோயைக் கண்டறிய புதிய பரிசோதனைக் கருவியை தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா இன்று (09/01/2021) திருச்சி அரசு மருத்துவமனைக்கு வழங்கினார்.
கடந்த சில வருடங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இருதய நோய் என்பது ஒரு தவிர்க்க முடியாத நோயாக மாறிவிட்டது. இந்த நோயின் மிக முக்கியப் பிரச்சினை பிறக்கும் குழந்தைகள் இடையே இதயத்தில் (இதயத்துடிப்பு) ஏற்பட்டிருக்கக் கூடிய மற்ற பிரச்சனைகள், இதயத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய ஓட்டை, இதய வால்வுகளில் ஏற்பட்டிருக்கக் கூடிய அடைப்புகள் உள்ளிட்டவற்றை 'எக்கோ' என்ற கருவியைக் கொண்டு மட்டுமே கண்டறிய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. முன்பு ஈசிஜி மட்டும் வைத்து கண்டுபிடிக்கப்பட்டு வந்த நிலையில், அதில் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே இந்தப் புதிய கருவி மூலம் குழந்தைகளுடைய இருதயம் குறித்த அனைத்து பிரச்சினைகளையும் முழுமையாகக் கண்டறிய முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தனது தொகுதி நிதியிலிருந்து சுமார் 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த கருவியை தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் சிவா இன்று (09/01/2021) திருச்சி அரசு மருத்துவமனைக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வில் பேசிய திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன் வனிதா, "திருச்சி அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு சுமார் 500 பெண்கள், குழந்தை பிறப்பதற்காக அனுமதிக்கப்படுகின்றனர். அதில், பிறக்கும் 300 குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அதன்பிறகு காப்பாற்றப்படுகின்றன. ஆனால் தற்போது பிறக்கும் குழந்தைகளுக்கு இருதய நோய் என்பது (இன்றைய காலகட்டத்தில்) அதிகமாகி வருகிறது. எனவே அதனைக் கண்டறிய இந்த கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
"தனியார் மருத்துவமனைகளில் நடத்தப்படும் இந்தப் பரிசோதனைக்கு சுமார் 3,000 முதல் 5,000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால், திருச்சி அரசு மருத்துவமனையில் இது முற்றிலும் இலவசமாகப் பரிசோதிக்கப்படும்" என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.