கரூர் மாவட்டம், நெய்தலூர் காலனியைச் சேர்ந்தவர் காளியம்மாள்(43). கூலி வேலை செய்து வரும் இவருக்கு, கடந்த மூன்று மாத காலமாக வயிறு வீங்கி, இயற்கை உபாதைகள் கழிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக வந்தார். அப்போது அவருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் காளியம்மாளின் கர்ப்பப் பையில் மிகப்பெரிய கருப்பை நார்த்திசு கட்டி (Fibroid) இருப்பது கண்டறியப்பட்டது. ஆப்ரேஷன் செய்து கட்டியை அகற்றாவிட்டால் அது உயிருக்கு ஆபத்தாகி விடும் என்பதால் ஆப்ரேஷன் செய்வதற்கு மருத்துவமனை டீன் வனிதாவிடம் அனுமதி பெறப்பட்டது. இதனை தொடர்ந்து டாக்டர்கள் மோகன்ராஜ், பாக்கியவதி, மகேஸ்வரி, நந்தகுமார், செந்தில்குமார், மயக்க மருந்து நிபுணர் சிவகுமார் ஆகியோர் அடங்கிய மருத்துவ நிபுணர்கள் ஆப்ரேஷன் செய்தனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆப்ரேஷனில் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த 40 செமீ நீளம், 30 செமீ அகலம் கொண்ட 8 கிலோ எடையிலான கட்டி அகற்றப்பட்டது. இது குறித்து மருத்துவமனை டீன் வனிதா கூறும்போது, “அந்த பெண்ணின் கர்பப்பையில் கட்டி வளர்ந்திருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. அதனை அகற்றாவிட்டால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், உடனடியாக அறுசைச் சிகிச்சை செய்தோம். இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தால் சுமார் 3 லட்சம் ரூபாய்க்கும் மேல் செலவாகி இருக்கும். ஆனால் அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் ஒரு ரூபாய் செலவில்லாமல் அறுவை சிக்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த பெண் பூர்ண உடல் நலம் பெற்று நலமாக இருக்கிறார்” என்று கூறினார்.