உடைமைக்குள் வைத்து கடத்தப்பட்ட, ரூபாய் 1.30 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலைய அதிகாரிகள் அதிரடி சோதனையில் இந்தத் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில், கடந்த சில வருடங்களாகவே கடத்தல் பொருள்கள் கொண்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகள், தாங்கள் வாங்கிவரும் பொருட்களுக்கு உரிய வரி செலுத்தாமல் கொண்டு வருவது ஒரு பக்கம் என்றால், வரி செலுத்தாமலும் அரசாங்கத்திற்குத் தெரியாமலும் கடத்திவருவது என்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் திட்டமான, 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்களை அழைத்து வரும் பணியில், 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நேற்று இரவு, துபாயிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய பயணிகளைச் சோதனை செய்தபோது, விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் (32) கொண்டு வந்த, உடைமையில் மறைத்து வைத்து 2,600 கிராம் தங்கத்தைக் எடுத்துவந்தது தெரியவந்தது. உடைமைகளைச் சோதனை செய்த போது, தங்கத்தைக் கைப்பற்றியதோடு, அதன் மதிப்பு 1.30 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரூபாய் 1.30 கோடி மதிப்பிலான தங்கம், உடைமைக்குள் வைத்துக் கடத்தப்பட்ட சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.