திருச்சி இந்திராகாந்தி மகளிர் கல்லூரியில் ஆங்கில துறையில் விரிவுரையாளராக பணியாற்றும் ஒரு பெண், மலைக்கோட்டை பகுதியில் வசித்து வருகிறார். ஆண்டார் வீதியில் வழியாக அவர் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஆம்புலன்சில் வந்த கும்பல் அவரை வலுக்கட்டாயமாக வாகனத்திற்குள் ஏற்றி கடத்தி சென்றிருக்கிறார்கள். அப்போது அந்த பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அந்த பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள்.
உடனடியாக வாகன தேடுதல் வேட்டையை ஆரம்பித்த காவல்துறையினர், அனைத்து சோதனை சாவடிகளையும் உஷார்படுத்தியது. இதனை அறிந்த கடத்தல் கும்பல் பெண்ணை துவரங்குறிச்சி அருகே இறக்கிவிட்டு சென்றிருக்கிறது. பின்னர் அங்கு சென்ற கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பெண்ணை பத்திரமாக மீட்டு வந்துள்ளார்.
போலீஸ் விசாரணையில் மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அதிமுக வட்டச் செயலாளர் 'வணக்கம்' சோமு தான் இந்த செயலில் ஈடுபட்டது என தெரியவந்துள்ளது. ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்க்கும் நிலையில், மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறாராம் 'வணக்கம்' சோமு
இதற்கு இடையில் இந்த கல்லூரி பேராசிரியை தினமும் ஆண்டார் வீதி அருகே நடந்து வரும் போது, பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அவர் தவறாக புரிந்து கொண்டு காதல் என்கிற போர்வையில் ஏற்கனவே ஓரு முறை அந்த பெண்ணை கடத்த முயற்சி செய்ததும், பிறகு அந்த பேராசிரியை தரப்பில் அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று சொன்னதும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு இனி வர மாட்டேன் என்று சொன்னதும் ஏற்கனவே நடந்துள்ளது. அப்படி சொன்னவர் தற்போது மீண்டும் ஆம்புலன்சில் கடந்தியிருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள வணக்கம் சோமு உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
வணக்கம் சோமு எதிர்காலத்தில் கவுன்சிலர் ஆகும் கனவோடு, அந்த பகுதியில் குடிநீர் வசதியை இவரே தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்து கொடுத்ததும், கஜா புயல் சமயத்தில் ஜெரேட்டர் ஏற்பாடு செய்து கொடுத்து என அந்த பகுதியில் ஒரு நல்லபெயரை எடுத்து வைத்திருந்தவர் இந்த பெண் விவகாரத்தில் சிக்கி போலீஸ் தேடி தலைமறைவு ஆகின்ற அளவிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.