Skip to main content

துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசாரிடம் விசாரணை நடத்தப்படும் - அருணா ஜெகதீசன்

Published on 05/06/2018 | Edited on 05/06/2018
aruppukottai

 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக  விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்தது தமிழக அரசு. இதையடுத்து நேற்று தூத்துக்குடி சென்று அருணா ஜெகதீசன்   விசாரணையை தொடங்கினார்.

 

 தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அங்கு துப்பாக்கி சூட்டிலும், தடியடியிலும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பிறகு  துப்பாக்கி சூட்டில் பலியான சிலோன் காலனியைச் சேர்ந்த கந்தையா, புஷ்பாநகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார், மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்த சண்முகம் ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்களுடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

 

முன்னதாக அருணா ஜெகதீசன் நேற்று மதியம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,  ‘’விசாரணை ஆணையத்தின் தலைமை அலுவலகம் சென்னை கிரீன்வேஸ் ரோட்டில் இயங்கி வருகிறது.  30-ந் தேதி வரை பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யலாம் என்று தற்போது அறிவுறுத்தி உள்ளேன். தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் பிரமாண வாக்குமூலத்தை பெற்று பதிவு செய்ய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

 

கோர்ட்டில் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த அலுவலரும், மாவட்ட நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்று விட்டு வக்கீலாக பணியாற்றி வருபவரும் முகாம் அலுவலகத்தில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  இவர்கள் 2 பேரும் பிரமாண பத்திரம் மற்றும் ரகசிய தகவல்களை பெறுவதற்கு பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.  எனவே பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் சமர்ப்பிக்கும் தகவல்கள் பாதுகாக்கப்படும். தொலைக் காட்சி, பத்திரிகை, சமூக ஆர்வலர்களிடம் இருக்கும் வீடியோ பதிவு காட்சிகளை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

விசாரணை 3 பகுதிகளாக நடைபெறும். முதலாவதாக பாதிக்கப்பட்ட மக்கள், காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்கள், துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் இதர பொதுமக்களை விசாரிக்க உள்ளேன்.  இரண்டாவதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், சமூக ஆர்வலர்கள், நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்பவம் பற்றி தெரிந்தவர்கள், தகவல் அளிப்பவர்கள், விசாரணை ஆணையம் விசாரிக்க எண்ணி உள்ள நபர்கள், பத்திரிகை, தொலைக்காட்சியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும்.

 

மூன்றாவதாக போலீஸ் துறையை சேர்ந்தவர்கள், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சொல்லப்படும் போலீசார், தன்னிச்சையாக சாட்சியம் கூற விரும்புகிறவர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், போலீஸ் துறை உயர் அதிகாரிகள், முன்பு இருந்த மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் இதர அதிகாரிகள் விசாரிக்கப்படுவார்கள். இந்த விசாரணைக்கு 3 மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. விரைவில் விசாரணை நடத்தி முடிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்