தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு லிட்டருக்கு 40 ரூபாயாகவும், எருமைப்பாலுக்கு லிட்டருக்கு 50 ரூபாயாகவும் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரியில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) நடந்தது. மாநிலத்தலைவர் முனுசாமி தலைமை வகித்தார். கூட்டத்திற்குப் பிறகு சங்கத்தின் பொதுச்செயலாளர் முகமது அலி கூறியதாவது:
ஆவின் நிர்வாகம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பால் கொள்முதல் விலையை உயர்த்த மறுத்து வருகிறது. தற்போது தமிழகத்தில் 15 லட்சம் குடும்பத்தினர் கறவை மாடுகளை பராமரித்து வருகின்றனர். நாளொன்றுக்கு 1.50 கோடி லிட்டர் பால் உற்பத்தி ஆகின்றது. இதில் 32 லட்சம் லிட்டர் பாலை ஆவின் கொள்முதல் செய்கிறது. கால்நடைகளுக்கான தீவனங்களின் விலை 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை 700 ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்ந்துள்ளது. வைக்கோல், சோளத்தட்டை, தவிடு, புண்ணாக்கு உள்ளிட்ட அனைத்து வகை தீவனங்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. அவற்றுக்கு தட்டுப்பாடும் உள்ளது.
நெல், கரும்பு, கோதுமை ஆகிய விளை பொருள்களுக்கு ஆண்டுதோறும் கொள்முதல் விலையை மத்திய, மாநில அரசுகள் உயர்த்தி வரும்போது, பால் கொள்முதல் விலையை மட்டும் உயர்த்தாமல் இருப்பது முரணாக இருக்கிறது. அதிமுக அரசு, பால் உற்பத்தியாளர்களை குறுகிய அரசியல் நோக்கோடு பார்ப்பது அவர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். இனியும் காலதாமதம் செய்யாமல் பசும்பாலுக்கு லிட்டருக்கு 40 ரூபாயாகவும், எருமைப்பாலுக்கு லிட்டருக்கு 50 ரூபாயாகவும் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.
பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக 200 கோடி ரூபாய் வரை பால் பணம் வழங்காமல் ஆவின் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. அத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அதேபோல் ஆவின் நிர்வாகம் தினமும் 50 லட்சம் லிட்டர் வரை கொள்முதல் செய்ய வேண்டும். சத்துணவு திட்டத்தில் பாலையும் இலவசமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் தினமும் பத்து லட்சம் லிட்டர் பால் கூடுதலாக கொள்முதல் செய்ய முடியும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் பால் உற்பத்தியாளர்கள் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு முகமது அலி கூறினார்.