திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆறுகள், பாசன வாய்க்கால்கள் உள்ளிட்ட அனைத்தும் முழுமையாகத் தூர்வாரப்பட்டு, ஆறுகளின் கரைகள் அனைத்தும் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆறுகளின் கரைகளைப் பலப்படுத்துவது, சாலை அமைத்து போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது உள்ளிட்டவற்றுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாகப் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் வகையில் குடமுருட்டி, உய்யக்கொண்டான், மற்றும் கோரையாற்றின் கரைகளைப் பலப்படுத்தி சாலை அமைத்தல் தொடர்பாக இன்று அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட ஆட்சியா், அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படைவசதி மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். எம். சாய்குமார், நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா, மாவட்ட ஆட்சித்தலைவர் சு. சிவராசு, மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், ந. தியாகராஜன், எம். பழனியாண்டி, இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வு பணிகளுக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து திருச்சியில் புதிததாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையம் வரை கரைகள் பலப்படுத்தப்பட்டு 8 மீட்டர் அகலத்திற்குச் சாலைகள் அமைப்பதற்கான ஆய்வுகள் இன்று நடைபெற்றது. இந்த சாலை பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்தால் சுமார் 2 லட்சம் மக்கள் பிரதான சாலைகளுக்கு வராமல் இந்த வழிகளைப் பயன்படுத்திக்கொள்வார்கள். இந்த பணிகளை செய்வதற்கான இரண்டு காரணம் முதலில் சாலை ஏற்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் குறையும். கரைகளைப் பலப்படுத்துவதால் வெள்ளப்பெருக்கில் இருந்து திருச்சி நகரப்பகுதி தப்பிக்கும் என்பதற்காகத்தான் இன்று ஆய்வு செய்துள்ளோம்” என்று கூறினார்.