திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 37வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சரும் பல்கலைக்கழக இணைவேந்தருமான பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது, “சங்ககாலம் திரும்பிக்கொண்டிருக்கிறது. சங்க காலத்தில் ஆண், பெண் புலவர்கள் இருந்தனர். இடைக்காலத்தில் ஏற்பட்ட கலாச்சார படையெடுப்பால் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என மாறியது. தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது. தமிழக முதல்வர் அரசு கலைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் இல்லை என அறிவித்துள்ளார். தமிழக அரசு உயர்கல்வியை ஊக்குவிக்கிறது. மாணவர்களுக்கு இருமொழிக் கொள்கை அவசியம் மூன்றாவது மொழி தேவை என்றால் படிக்கலாம், கட்டாயப்படுத்தக்கூடாது, திணிக்கக்கூடாது. இரு மொழிக் கொள்கைக்கு தமிழக கவர்னர் ஆதரவு அளிக்க கோரிக்கை முன் வைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் கட்டாயம் பெரியார், அண்ணா, பாரதியார், பாரதிதாசன், காமராஜர் போன்ற தலைவர்களின் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்கள் குறித்தும் எதற்காக அவர்களுடைய பெயர் வைக்கப்பட்டது என்பதை குறித்தும் அறிந்து கொள்ள முயல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.