தமிழக காவல்துறையில் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், குழந்தைகளின் நலன்களுக்காகவும் பல்வேறு அரசு சார்ந்த அமைப்புகள் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு சில காவல் அதிகாரிகள் அலட்சியத்தினால் குழந்தைகள் பரிதாபநிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பது திருச்சி சம்பவம் உதாரணம்.
கடந்த ஆகஸ்ட் 22 ம் தேதி திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் சுமார் 30 வயது மதிக்கதக்க சந்தேகப்படியான நபர் ஒருவர் 1 வயது பெண் குழந்தையுடன் இரவு நேரத்தில் சுற்றி வந்துள்ளார்.
குழந்தையை தொடர்ந்து அழுது கொண்டு இருக்கவும், அதை அடக்க தெரியாமல் அடித்து பயமுறுத்திக்கொண்டு இருந்த அந்த நபரைப்பார்த்தவர்கள் 1098 என்கிற குழந்தைகள் உதவி எண்ணிற்கு தகவல் அளித்துள்ளனர்.
கொஞ்ச நேரத்தில் திருச்சியில் உள்ள 1098 குழந்தைகள் உதவியாளர்கள் வந்திருக்கிறார்கள். குழந்தையை வைத்திருக்கும் நபரிடம், அந்த நபர் யார், எங்கிருந்து வருகிறார் என்று ரயில்வே காவல்துறையினர் (RPF), தலைமையில் குழந்தைகள் நல உதவியாளர்கள் விசாரித்து கொண்டிருக்கும் போது அந்தவழியே தமிழக இருப்புப்பாதை எஸ்.ஐ. சேகர் , ஜான்சன் ஆகியோர் விசாரணை செய்யாமலேயே கையில் குழந்தையுடன் இருந்த சந்தேகப்படிபடியான நபரை அடித்து துரத்தியுள்ளனர். விசாரித்துக்கொண்டிருந்த 1098 எண்ணிலிருந்து வந்த குழந்தைகள் உதவியாளர்களை காவல் உதவி ஆய்வாளர் சேகர் யாரைக்கேட்டு இங்க வந்தீர்கள், உங்களுக்கு யார் தகவல் கொடுத்தது, முதலில் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறுங்கள் என்று சத்தமிட்டு விரட்டியிருக்கிறார். நீங்க வந்து குழந்தையை பாதுகாக்கணும்னு சொல்லிட்டு போயிடுவீங்க, யார் குழந்தை மையத்துக்கு அலைஞ்சிக்கிட்டு இருக்கிறது என்று அலட்சியமாக பேசி விரட்டியிருக்கிறார்கள்.
அதன் பின் போலீசாரால் வெளியே துரத்தியடிக்கப்பட்ட அந்த நபரை குழந்தை நல உதவியாளர்கள் விசாரித்த போது, தனது பெயர் ஆறுமுக நைனார் என்றும், இது தனது குழந்தை என்றும் சொந்த ஊர் திருநெல்வேலி. ஒரு வாரத்திற்கு முன்பு நாகர்கோவிலில் ரயில் நிலையத்தில் குழந்தை ஒன்றை கடத்தியதாக என்னோட மனைவி ராஜீ, போலீசாரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் இருக்கிறார் என்று உளறியிருக்கிறார். இந்த குழந்தையை என்னால் வளர்க்க முடியவில்லை. அதனால சென்னையில் உள்ள எனது மனைவியின் அம்மா வீட்டிற்கு கொண்டு போய் விட போய்க்கிட்டு இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
சென்னையில் உள்ள மனைவியின் அம்மா என்ன செய்கிறார் என்று விசாரிக்கையில், அவர் சாராயம் விற்றுக்கொண்டிருப்பதாக சொல்லி அடுத்த பகீர் தகவல் சொல்லி குழந்தை உதவி மையத்தை சேர்ந்தவர்களை மிரள வைத்திருக்கிறார். அந்த நபரிடம் இருந்து பின்னர் குழந்தையின் நிலையைக் கண்டு குழந்தை நல உதவியாளர்கள் மீட்டு பாதுகாப்பும், பராமரிப்பும் அளித்துள்ளனர். ஆனால் இருப்பு பாதை தமிழக போலிசோ அந்த குழந்தையின் அப்பாவை அடித்து விரட்டியடித்து விட்டார்கள்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களையும் (AWPS) child friendly - ஆக மாற்றவேண்டும் என்ற அரசாணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னே உத்தவிட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்திலும் குழந்தைகளுக்கென தனிப்பட்ட துறை அமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் சமீபத்தில் மத்திய அரசின் ஒப்புதலுடன் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காக வாகனமும் இயக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் உதவி எண் (1098),மற்றும் 1091 ஆகிய எண்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேர உதவி வாகனமாக மாற்றப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது குழந்தைகளுக்கு பாதுகாப்பும் பராமரிப்பும் அடிப்படையாக கிடைக்கிறதோ, அதுவே வளர்ச்சிமிக்க நாடாக கருதப்படுகிறது.
அவ்வகையில் குழந்தைகளின் நலனில் ஈடுபாட்டோடு காணப்படக்கூடிய காவல்துறையே சரியான நேரத்தில் ஒரு குழந்தைக்கு பாதுகாப்பு அளிக்காமல் அலட்சியமாக சென்றது கண்டோர் அனைவரையும் தலைகுனிய வைக்கிறது. குழந்தை நல அமைப்பினரோ, அக்குழந்தையை அன்னை ஆசிரமத்தில் சேர்த்துள்ளனர்.