இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி (LIC) காப்பீடு நிறுவனம், தனது பணியாளர்களில் 50% நபர்களை மட்டும் நேற்று (20-04- 2020) அன்று முதல் பணிக்கு வருமாறு சுற்றறிக்கை அனுப்பியதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி பணியாளர்கள் நேற்று (20-04-2020) பணிக்குத் திரும்பினர்.
அதேபோல் திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் டிவிசனுக்குட்பட்ட அனைத்து எல்.ஐ.சி கிளைகளும் திறக்கப்பட்டது. இந்தத் தகவலை அறிந்த வாடிக்கையாளர்களும், கிளைக்கு நேரில் வந்து தங்களது பாலிசி பணத்தைச் செலுத்த முற்பட்டனர்.
ஆனால் அந்தப் பணத்தை வாங்கக் கூடாது என தஞ்சாவூர் டிவிசனுக்குட்பட்ட எல்.ஐ.சி தலைமை அதிகாரி, தனக்கு கீழ் உள்ள 27 கிளையின் மேலாளர் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளாராம். பொதுமக்கள் காரணம் கேட்டால், பண நோட்டின் மூலம் கரோனா வைரஸ் பரவுகிறது எனப் பதில் சொல்லுங்கள் என அவர் அறிவுறுத்தியுள்ளாராம்.
இதனால் பொது மக்களுக்குச் சேவை செய்ய மனமிருந்தும், டிவிசன் மேல் அதிகாரி உத்தரவை எப்படி மீறுவது? எனக் குழப்பத்தில் கீழ்மட்ட ஊழியர்கள் இருக்கிறார்கள். இதனால் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, நேற்று (20-04-2020) காலை முதலே திருச்சி, தஞ்சாவூர் டிவிசனுக்குட்பட்ட, 27 எல்.ஐ.சி கிளைகளும், பதட்டத்துடனும், பரபரப்பாகவும் காணப்படுகிறது.
தஞ்சாவூர் டிவிசனுக்குள் வராத "SO- LIC" கிளைகளில் மட்டும், வாடிக்கையாளர்களிடமிருந்து, பணம் வாங்கப்படுகிறதாம். இங்கு சேவை சிறப்பாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.