திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் இயங்கி வரும் டால்மியா சிமென்ட் ஆலை மற்றும் அரியலூர் மாவட்டத்தில் இயங்கக் கூடிய அல்ட்ரா டெக், ராம்கோ சிமெண்ட், செட்டிநாடு சிமெண்ட், டால்மியா சிமெண்ட், அரசு சிமெண்ட் ஆலைகள் உட்பட பல்வேறு ஆலைகளும் பகுதி சார்ந்த மக்களுக்கு உதவிகளை செய்தது போல கணக்கு காண்பித்து வந்தனர். தற்போது பேரிடராக உள்ள இந்த காலகட்டத்தில் வேலை வாய்ப்பு இன்றியும் வெளியில் நடமாடக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு அவதிப்படுபவர்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் குறைந்தபட்ச நிவாரணத்தொகையாக ரூ.5000 வழங்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி சிமெண்ட் ஆலை நிர்வாகத்தினருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
திருச்சி அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கல்லக்குடி, கோவாண்டாக்குறிச்சி, புதூர்பாளையம், வெங்கடாசலபுரம், ஆலம்பாக்கம் பழங்காநத்தம், முதுவத்தூர், கீழரசூர், மேலரசூர், தாப்பாய், வரகுப்பை, கல்லகம், புள்ளம்பாடி, விளாகம் கோவில், எசனை சன்னாவூர், வெங்கனூர், கொரத்தக்குடி கரைவெட்டி, பரதூர், கீழக்காவட்டாங்குறிச்சி, குந்தபுரம், கீழப்பழுவூர், மேல வண்ணம், புத்தூர், வி.கை காட்டி, செட்டித்திருக்கோணம், நெருஞ்சிக்கோரை, ரெட்டிப்பாளையம், நாகமங்கலம், விளாங்குடி, செந்துறை, உசேனாபாத், கயர்லாபாத், வாரணவாசி, சுண்டக்குடி, முள்ளுக்குறிச்சி, புதுப்பாளையம், மற்றுமுள்ள சுற்று வட்டார பகுதி மக்களுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டியது சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தி வாழ்வாதாரத்தை பாதிக்க வைத்த ஆலைகளின் கடமை.
இந்தப் பகுதி சுண்ணாம்புக்கல் கனிம சுரங்கங்களில் உள்ள கனிம வளங்களை எடுத்து கொள்ளை இலாபம் சம்பாதித்த இவர்கள் இந்த இக்கட்டான நேரத்தில் உதவி செய்ய சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் விவசாயிகள் சார்பில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.