சென்னை வேளச்சேரியில் ஐந்து பரலாங் சாலையில் கட்டுமான பணிக்காக 56 அடி பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பள்ளத்தில் அங்கு பணியாற்றி வந்த 4 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து இந்த விபத்தில் சிக்கிய 4 தொழிலாளர்களில் இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் பள்ளத்தில் சிக்கியுள்ள இருவரையும் மீட்கும் பணி 3 நாளாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா. சுப்ரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வரும் நிலையில், பள்ளத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர்.