Skip to main content

அகற்றப்பட்ட பெரியார் சிலை; வட்டாட்சியர் பணியிடமாற்றம்

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

Transfer RDO issue removal of Periyar statue in Sivagangai

 

"எச்.ராஜா வீடு இங்கதான் இருக்கு.. ஆனா யாரோ ஒருத்தர திருப்திப்படுத்தணும்னு.. எங்க பெரியார் சிலைய எடுத்துட்டு போயிட்டாங்க" என வெகுண்டெழுந்த பெரியாரிஸ்டால் சிவகங்கை பகுதியில் பதற்றம் நிறைந்து காணப்படுகிறது.

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த இவர், திருமயம் பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இளங்கோவன் தனது சொந்த முயற்சியால் தமிழ் இல்லம் எனும் பெயரில் ஒரு வீட்டைக் கட்டி, அதில் ஒரு நூலகத்தையும் அமைத்துள்ளார். அதுமட்டுமின்றி, பெரியார் மீது கொண்டுள்ள பேரன்பின் காரணமாக பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி அவரது வீட்டின் சுற்றுச்சுவரில் மார்பளவு பெரியார் சிலை ஒன்றை அமைத்துள்ளார். இந்த பெரியார் சிலை கடந்த 29 ஆம் தேதியன்று திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களால் திறக்கப்படவிருந்தது.

 

இது குறித்து தகவலறிந்த பள்ளத்தூர் காவல்நிலைய போலீசார், கடந்த சனிக்கிழமையன்று இளங்கோவன் வீட்டிற்கு சென்று, காம்பவுண்ட் சுவரின் மேல் பெரியார் சிலை திறப்பது குற்றம் எனக்கூறி சிலையை அகற்ற வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளங்கோவன், "இது என்னோட பட்டா நிலம். என்னோட இடத்துல சிலை வைக்குறதுல என்ன தப்பு இருக்கு" என போலீசாரிடம் வாதாடியுள்ளார். அதன்பிறகு போலீஸ் பாதுகாப்புடன் வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் பெரியார் சிலையை அகற்றி, சரக்கு வாகனத்தில் ஏற்றி காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர். இதனால் விரக்தியடைந்த இளங்கோவன், ‘யாரோ ஒருவரை திருப்திப்படுத்துவதற்காக இந்த பெரியார் சிலையை அகற்றியுள்ளது இந்த காவல்துறை’ எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

 

அதே நேரம், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் பண்ணை வீடு இளங்கோவன் வீட்டிற்கு அருகில் இருக்கிறது. அவர்களின் அழுத்தம் காரணமாகவே பெரியார் சிலை அகற்றப்பட்டதாக அரசல்புரசலாக பேசப்பட்டு வருகிறது. இதனிடையே, பெரியார் சிலை அகற்றப்பட காரணமாக இருந்த தேவகோட்டை ஏ.எஸ்.பி கணேஷ்குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், காரைக்குடி வருவாய் வட்டாட்சியர் கண்ணன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, "சட்டப்படி உத்தரவு பெற்று சிலை திறப்பை மீண்டும் நடத்துவோம் என உறுதி கூறியுள்ளார். மேலும், பெரியார் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தால் அப்பகுதியில் பதற்றம் நிறைந்து காணப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்