கடந்த 12-ஆம் தேதி நக்கீரன் இணையத்தில் “பத்து நாளைக்குத்தான ஆடுவ! அப்புறம் என்ன பண்ணுறேன் பாரு!” -தேர்தல் பறக்கும் படையை மிரட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜு! என்னும் தலைப்பில், வாகன சோதனையில் ஈடுபட்ட நேர்மையான அதிகாரி அமைச்சரால் அவமானப்படுத்தப்பட்டு, நாலாட்டின் புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜு மீது புகார் அளித்த கோவில்பட்டி பறக்கும்படை குழுத்தலைவர் மாரிமுத்து, விளாத்திகுளத்துக்கு ‘டிரான்ஸ்பர்’ செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நம்மைத் தொடர்புகொண்ட பறக்கும்படையினர், “இதெல்லாம் கொடுமைங்க. திட்டியதும் மிரட்டியதும் அமைச்சர். ஆனா.. நடவடிக்கை பாய்ந்திருப்பது, பொது இடத்தில் அமைச்சரால் மிரட்டப்பட்ட நேர்மையான அதிகாரி மீது. புகாரில் சொல்லப்பட்ட விஷயம் உண்மைதானா என்று முதலில் அமைச்சரை விசாரித்திருக்க வேண்டும். பறக்கும்படை குழுவினரையும் விசாரித்திருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யாமல், பறக்கும்படை குழுத்தலைவர் மீது டிரான்ஸ்பர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்றால் என்ன சொல்வது?
ஆளும்கட்சியினரும், அமைச்சர்களும் தேர்தல் விதிமுறைகளை மீறினாலும் கண்டுகொள்ளக்கூடாது என்று சொல்லாமல் சொல்வது போன்று தேர்தல் ஆணையம் செயல்பட்டிருக்கிறது. கோவில்பட்டியில் அதிகாரி ஒருவர் மீது எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை, தமிழகம் முழுவதும் இயங்கிவரும் பறக்கும்படையினருக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை போல இருக்கிறது. சுதந்திரமாகச் செயல்பட விடாமல் எங்கள் கையைக் கட்டிப்போட்டு விட்டது தேர்தல் ஆணையம். இனி, எந்த மந்திரி காரில் போனாலும், ஆளும்கட்சி பிரமுகர்கள் கார்களில் போனாலும், சோதனையே போடாமல் சல்யூட் அடித்து அனுப்பிவிடுவோம். வேறு வழியில்லை” என்றனர் குமுறலாக.
இடமாற்ற நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான செந்தில்ராஜை தொடர்புகொண்டோம்.
“டிரான்ஸ்பர் பண்ணலைங்க. ஃப்ளையிங் ஸ்குவாட் ஆபீசர்ஸ அவங்க வேலை பார்க்கிற தொகுதில போடக்கூடாதுன்னு ரூல் இருக்கு. அதனால, சொந்தத் தொகுதில வேலை பார்க்கிற 17 பேரை பக்கத்து தொகுதிக்கு மாற்றியிருக்கிறோம். அவ்வளவுதானே தவிர, அந்த ஆபீஸர் அமைச்சர் மேல கொடுத்த புகாரை உடனடியா எடுத்தாச்சு. நான் உடனே எஸ்.பி.கிட்ட சொன்னேன். சி.எஸ்.ஆர். போட்டதா எஸ்.பி. சொல்லிருக்காரு. நிச்சயமா நடவடிக்கை எடுப்போம். கோவில்பட்டியில் ஏ.இ.யா இருக்காரு மாரிமுத்து. மத்தபடி, இப்பவும் அவரு ஃப்ளையிங் ஸ்குவாட்லதான் இருக்காரு.” என்று விளக்கம் அளித்தவரிடம், ‘அமைச்சர் மீது புகார் கொடுத்த அன்றிரவே மாரிமுத்துவை பக்கத்து தொகுதிக்கு மாற்றியிருப்பது கடம்பூர் ராஜுவின் தலையீடு இருப்பதைத்தானே காட்டுகிறது?’ என்று இடைமறித்துக் கேட்டோம். அதற்கு ஆட்சியர் செந்தில்ராஜ் “அப்படி எதுவும் கிடையாது. ஃப்ளையிங் ஸ்குவாடோட டூட்டியே ஆர்கனைசிங் வெகிக்கிள்ஸ்தான். மாரிமுத்து அவரோட பணியைத்தான் செய்திருக்காரு. அவரோட புகாரை எடுக்கச்சொல்லி, அதற்கான நடவடிக்கை கண்டிப்பா எடுக்கப்படும். எலக்ஷன் கமிஷன் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ நாங்க ஃபாலோ பண்ணுறோம்.” என்று முடித்துக்கொண்டார்.
பறக்கும் படை தரப்பிலோ, “மாரிமுத்து இளநிலை பொறியாளராக வேலை பார்ப்பது, தூத்துக்குடி கலெக்டர் ஆபீஸுக்கு பக்கத்திலுள்ள, தூத்துக்குடி நபார்டு மற்றும் கிராம சாலைகள் – தூத்துக்குடி பிரிவில்தான். அதனால்தான், அவர் வேலை பார்க்கும் தூத்துக்குடி தொகுதியில் போடாமல், கோவில்பட்டி தொகுதியில் போட்டிருக்கிறார்கள். கோவில்பட்டியில் எந்த அலுவலகத்திலும் மாரிமுத்து வேலை பார்க்கவில்லை. முதலில் ரூல்படி சரியாத்தான் போட்டிருந்தாங்க. அமைச்சர் மேல கம்ப்ளைன்ட் கொடுத்தவுடனே, அமைச்சரை திருப்திப்படுத்துவதற்காக, தேவையில்லாம அவரை விளாத்திகுளத்துக்கு தூக்கியடிச்சிருக்காங்க. அமைச்சரின் தலையீடு கலெக்டருக்கு தெரியவில்லையா? தெரிந்தேதான், மாரிமுத்து கோவில்பட்டியில் வேலை பார்க்கிறார் என்று பொய் சொல்கிறாரா?” என்று உண்மையைப் போட்டுடைத்தார்கள்.
தமிழகத்தில் தேர்தலை நேர்மையாக நடத்துவார்களா என்று சந்தேகம் எழுவதற்கு இந்த ஒரு சம்பவமே போதும்!