சென்னிமலை முருகன் கோவிலில் நடைபெறும் பூஜைக்கு படிக்கட்டுகள் வழியாக திருமஞ்சனம் கொண்டு செல்ல புதிய காளை மாட்டுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் காலை 8 மணி பூஜைக்கு தினமும் அடிவாரத்தில் உள்ள கோவிலுக்கு சொந்தமான கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து அதை மூங்கில் கூடைகளில் வைத்து காளை மாடு மூலம் 1,320 படிக்கட்டுகள் வழியாக திருமஞ்சனம் கொண்டு செல்வது வழக்கம். இந்த நடைமுறை சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது.
திருமஞ்சனம் கொண்டு செல்லும் காளை மாடுகளை பராமரிக்க அடிவாரத்தில் கோசாலை உள்ளது. இந்த கோசாலையில் தற்போது 3 காளை மாடுகள் கால்நடை உதவி மருத்துவரின் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக திருமஞ்சனம் கொண்டு சென்ற காளை மாட்டிற்கு வயது முதிர்வு காரணமாக படிக்கட்டுகளில் செல்ல சிரமப்பட்டது. இதனால் பக்தர் ஒருவர் மூலம் காணிக்கையாக வழங்கப்பட்ட மற்றொரு காளைக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது திருமஞ்சனம் கொண்டு செல்லும் காளையுடன் இந்த புதிய காளைக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் 3 மாதங்களில் புதிய காளையும் படிக்கட்டுகளில் சுலபமாக செல்ல பயிற்சி பெற்று விடும் என கோவில் பணியாளர்கள் தெரிவித்தனர்.