பொங்கல் திருநாளை தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் நாடுகளிலும் கொண்டாடி வருகின்றனர். தை மாதம் முழுவதும் கோலாகலமாகவே இருக்கும். அதேபோல் பல ஊர்களில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சம்மட்டிவிடுதி கிராமத்தில் நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் போட்டியில் மரம் சாயாமல் இருக்க பாதுகாப்பிற்காக இழுத்து கட்டப்பட்டிருந்த ஒரு கயிற்றில் ஏறிய விஜயகுமார் (38) என்ற இளைஞர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (29). இவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவருடைய கிராமத்தில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டார். அப்போது இளவட்ட கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. அதில் பிரபு இளவட்ட கல்லை தூக்கி பின்புறமாக எறிய முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக கல் முகத்தில் விழுந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த பிரபு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பொங்கல் போட்டியில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.