நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், டி.எம்.கல்யாண நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு திருமணமாகி கார்த்திக் ராஜா, சுர்ஜித் (26) என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் சுர்ஜித் ஈரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று கார்த்திக் ராஜா, சுர்ஜித், அவரது நண்பர் சதீஷ் ஆகியோர் குமாரபாளையத்தில் சினிமா பார்க்க கிளம்பிச் சென்றனர். காலை காட்சி பார்க்க முடியாததால் மதியம் காட்சி பார்க்க முடிவு செய்தனர். இதனையடுத்து அவர்கள் மூன்று பேரும் பவானி, லட்சுமி நகர், பவிஸ் பார்க் அருகே உள்ள காவிரி ஆற்றில் குளிக்க முடிவு செய்து சேலம் -கோவை பைபாஸ் பாலத்திற்கு அடியில் காவிரி ஆற்றின் மேற்புற கரை ஓரமாக குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சுர்ஜித் திடீரென சுழலில் சிக்கி நீரில் மூழ்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக் ராஜா மற்றும் சதீஷ் ஆகியோர் கத்தி கூச்சலிட்டனர்.இது குறித்து பவானி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றில் இறங்கி சுர்ஜித்தை தேடினர். சிறிது நேரத்தில் சுர்ஜித் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன் கண் முன்னே தம்பி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.