தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகில் பிரசித்தி பெற்ற மலையாள மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தை முன்னிட்டு கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஏழு நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை பக்தர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருவார்கள். அதே போல் இந்த ஆண்டு கடந்த 4 ஆம் தேதியன்று மலையாள மாரியம்மன் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சிகளுடன் திருவிழா தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, இந்த கோவிலில் தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது, மலையாள மாரியம்மனை பல்லாக்கு தூக்கிச் செல்வது என ஏகப்பட்ட நிகழ்வுகள் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், இந்த திருவிழாவில் கடைசி நாளான 11 ஆம் தேதியன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு, இந்த கோயிலின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றுள்ளது. கோயில் எதிரே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கிய பக்தர்கள் அம்மனுக்கு தங்களுடைய நேர்த்திக் கடன்களை செலுத்தி வந்துள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது, தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கிக் கொண்டிருக்கும்போது இரண்டு பெண்கள் வேக வேகமாக உள்ளே நுழைந்துள்ளனர். அவர்கள் தீக்குண்டத்தில் தங்களது நேர்த்திக் கடன்களை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் தீயில் விழுந்து அலறித் துடித்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அந்தப் பெண்களை உடனடியாக தீயில் இருந்து காப்பற்றியுள்ளனர். இதனால் அந்த கோயிலில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.