ராமநாதபுரம் சாயல்குடி அருகே கருவாட்டு கடை வைத்திருந்த பெண் மாற்றுத்திறனாளியை அதிகாரி ஒருவர் தரக்குறைவாக பேசி, விற்பனைக்கு வைத்திருந்த கருவாடுகளை தூக்கி சாலையில் வீசும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன குரல்கள் எழுந்து வந்த நிலையில் அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை செயல்படுவது வழக்கம். வார சந்தையில் ஒரு சில கடைகள் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக புகார்கள் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் பேரூராட்சியின் செயல் அலுவலர் சேகர் என்பவர் ஆய்வு செய்தார். அப்பொழுது மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அந்த பகுதியில் கருவாட்டு கடை வைத்திருந்தார். கடையை அகற்றும் படி சொன்ன அலுவலர் சேகர், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து மாற்றுத்திறனாளி பெண்ணை தரக்குறைவாக திட்டியதோடு, விற்க வைக்கப்பட்டிருந்த கருவாடுகளை தூக்கி சாலையில் வீசினார்.
இதை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தட்டிக் கேட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாற்றுத்திறனாளி பெண்ணிடம் தரை குறைவாக நடந்துகொண்ட அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன குரல்கள் எழுந்து வருகிறது. இதுகுறித்து பேரூராட்சி ஆணையருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அத்துமீறலில் ஈடுபட்ட அதிகாரி சேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.