Skip to main content

விறகு அடுப்பை பற்ற வைத்து மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்!

Published on 28/12/2024 | Edited on 28/12/2024
 tragedy that befell the old woman after lighting the wood stove

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த வடக்கு பேட்டை, தண்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகம்மாள்(75). இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். நாகம்மாள் தற்போது மகன் ராமச்சந்திரனுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி நாகம்மாள் குளிப்பதற்காக வீட்டிற்கு வெளியே உள்ள விறகு அடுப்பை பற்ற வைத்து தண்ணீரை சுட வைத்துக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நாகம்மாளின் சேலை முந்தானை தவறி தீயில் விழுந்து விட்டது. இதனால் அவரது சேலையில் தீ மல மளமளவெனப் பிடித்தது.  நாகம்மாள் வேதனையால் அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை அவர் மீது ஊற்றி தீயை அணைத்தனர். 

இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த நாகம்மாளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாகம்மாள் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நாகம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்