Skip to main content

4.60 டன் ரேஷன் அரிசி கடத்தல்; மினி லாரியுடன் 2 பேர் கைது

Published on 12/09/2022 | Edited on 12/09/2022

 

 Police arrested two people who smuggled 60 tons ration rice

 

சேலம் அருகே, 4.60 ரேஷன் அரிசி, இரண்டு மினி லாரிகளுடன் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் ரெட்டிப்பட்டி, மாமாங்கம், கருப்பூர் ஆகிய பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல்துறையினர் ரெட்டிப்பட்டி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இரண்டு மினி லாரிகளை மடக்கி சோதனை செய்தனர்.

 

இந்தச் சோதனையில், மினி லாரியில் 2.80 டன் ரேஷன் அரிசியும், மற்றொரு மினி லாரியில் 80 டன் ரேஷன் அரிசியும் இருப்பது தெரிய வந்தது. அந்த வாகனங்களை ஓட்டி வந்த ஓட்டுநர்களைப் பிடித்து விசாரித்தனர். இதில், சேலம் சோளம்பள்ளத்தைச் சேர்ந்த விஜய் (34), பழைய சூரமங்கலத்தைச் சேர்ந்த ஜாபர்(21) என்பது தெரிய வந்தது.

 

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்கள் கடத்திச் சென்ற 4.60 டன் ரேஷன் அரிசியும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

 

ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டியைச் சேர்ந்த குமார் என்பவர் சுற்றுவட்டார கிராம மக்களிடம் இருந்து ஒரு கிலோ ரேஷன் அரிசியை 5 ரூபாய்க்கு வாங்கி, அதை வெளிமாநிலங்களுக்கு கடத்திச் சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதும், தற்போது கைது செய்யப்பட்ட வாகன ஓட்டுநர்களை ரேஷன் அரிசி கடத்தல் தொழிலுக்கு பக்கபலமாக வைத்துக் கொண்டதும் தெரிய வந்தது. பிடிபட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் பேரில் பூசாரிப்பட்டி குமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்