விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள வீரங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் 33 வயது இளையராஜா. பட்டதாரியான இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். சமீபத்தில் அவரது தங்கைக்குத் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காகத் தனது ஊருக்கு வந்துள்ள இளையராஜா ஊரில் உள்ள பெரிய ஏரிக்குச் சென்றுள்ளார்.
அப்போது தண்ணீரில் இறங்கியபோது எதிர்பாராத விதமாகக் கால் சேற்றில் சிக்கி வழுக்கி ஏரிக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளார். இளையராஜாவுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்து நீரில் மூழ்கியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் தண்ணீரிலிருந்து வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் தண்ணீரில் குதித்து இளையராஜாவைத் தேடிப் பார்த்தனர். நீண்ட தேடலுக்குப் பிறகு மயங்கிய நிலையில் அவரை ஏரியிலிருந்து மீட்டு கண்டாச்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இளையராஜா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இளையராஜாவின் அண்ணன் செந்தில்குமார் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இளையராஜாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.