முகக் கவசங்களை அணிந்தால் மட்டுமே கரோனா மூன்றாவது அலையைத் தடுக்க முடியும் என்று நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு சமூக அக்கறையோடு விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார் திருச்சியைச் சேர்ந்த போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன்.
கரோனா இரண்டாவது அலையிலிருந்து மக்கள் விடுபெற்றாலும் மூன்றாவது அலையைத் தவிர்க்க முடியாது என்கிற மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கை பொதுமக்களுக்கு ஒரு சவாலாகவே உள்ளது. இந்நிலையில், ‘அம்மா மாஸ்க் போடுங்க.. தம்பி மாஸ்க் போடுங்க..’ என்று திருச்சியில் உள்ள ஒவ்வொரு சிக்னல்களிலும் கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணனின் செயல் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
இருசக்கர வாகனங்களில் முகக் கவசங்களை அணியாமல் வருபவர்களுக்கு இலவச முகக் கவசங்களை வழங்குவதோடு, நாள்தோறும் 10க்கும் அதிகமான பேருந்துகளில் ஏறி தன் சக போக்குவரத்து காவலர்களின் உதவியோடு பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார். பொதுமக்களுக்கு அறிவுரை கூறும் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவியுள்ளன.