போக்குவரத்து நெரிசல் தொடர்பாக சிறுவன் ஒருவன் காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா நகரில் தனியார் பள்ளியில் யுகேஜி படிக்கும் சிறுவன் ஒருவன் அளித்த புகார் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பள்ளி அருகே உள்ள காவல்நிலையம் சென்ற அந்த சிறுவன் அங்குள்ள அதிகாரிகளிடம் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், தான் இந்த குறிப்பிட்ட பள்ளியில் படிப்பதாகவும், பள்ளிக்கு வரும் நேரத்தில் இந்த பகுதியில் பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசல் இருப்பதால் தன்னால் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு வருவது சிரமமாக இருப்பதாகவும், இதனால் ஒருமணி நேரம் முன்னதாக கிளம்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க நீங்கள் உதவ வேண்டும் என்றும் அந்த சிறுவன் கோரிக்கை விடுத்தான். இதனை கேட்ட அப்பகுதி காவல் ஆய்வாளர் பிரச்சனையை தீர்க்க தாங்கள் நடவடிக்கை எடுப்பதாகவும், இதே போல் இனிமேல் பிரச்சனை ஏற்பட்டால் என்னை இந்த எண்ணில் அழைக்கலாம் எனக்கூறி தன்னுடைய தொலைப்பேசி எண்ணையும் அந்த சிறுவனிடம் வழங்கியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.