தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தும் முடிந்து, சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தேர்தல் நடத்தை வழிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் களம் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், பிரச்சாரம் மிகத்தீவிரப்படுத்தப்பட்டு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணிகளில் வேட்பாளர்கள் இறங்கியுள்ளனர். வாக்கு சேகரிக்கும்போது நடைபெறும் சில எதிர்பாராத நிகழ்வுகள் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை பழங்காநத்தம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, கூட்டத்தில் ஆரத்தி எடுக்க வரிசையில் நின்றுகொண்டிருந்த மூதாட்டி ஒருவர் திடீரென சாமியாடி அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு அருள்வாக்கு சொன்னார். பிறகு செல்லூர் ராஜு சாமியாடிய மூதாட்டிக்கு சால்வை அணிவித்து, தனது பரப்புரையை தொடங்கினார்.