Skip to main content

சின்னாளபட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்! 

Published on 25/01/2025 | Edited on 25/01/2025
Traders besiege Chinnalapatti Town Panchayat office

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள்  உள்ளன. சுமார் 50 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். 1970ம் ஆண்டு 7ம் மாதம்  பேரூராட்சி மன்றத்தலைவராக டி.பி.எஸ்.லட்சுமணசெட்டியார் தலைவராக  இருந்தபோது 10 கடைகள் கொண்ட மார்க்கெட் திறக்கப்பட்டது. அதன்பின்னர்  1986ம் வருடம் திமுகவைச் சேர்ந்த எ.எம்.டி.தவமணி பேரூராட்சி தலைவராக இருந்தபோது 84 கடைகள் கொண்ட அண்ணா தினசரி மார்க்கெட்  திறக்கப்பட்டது. எல் வடிவ பாதை மற்றும் குறுக்குப் பாதையுடன் அண்ணா தினசரி  மார்க்கெட் அமைக்கப்பட்டது.

மார்க்கெட் அருகே ஆடு அடிக்கும் தொட்டியும்  அமைத்துக் கொடுத்ததால் அண்ணா தினசரி மார்க்கெட் வரும்  சின்னாளபட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒரே இடத்தில் தங்களுக்கு வேண்டிய  அரிசி, பருப்பு, காய்கறிகள், இறைச்சி, மீன், மண்பானை மற்றும் சமையல் செய்ய பயன்படுத்தும் பாத்திரங்கள் உட்பட அனைத்தையும் வாங்கி வந்தனர்.  நாளடைவில் நகரம் விரிவடையவே ஆங்காங்கே காய்கறி மற்றும் இறைச்சி  கடைகள் புற்றீசல் போல் தொடங்கப்பட்டதால் அண்ணா தினசரி மார்க்கெட் வரும்  பொதுமக்கள் வரவு குறைந்து வந்தது. 84 கடைகளில் 55 கடைகள் மட்டும்  செயல்பட்டு வந்தன. இந்த கடைகளை பேரூராட்சி நிர்வாகம் முறையாக  பராமரிக்காததாலும், கடையை வாடகைக்கு எடுத்தவர்கள் அவற்றை சரிவர கவனிக்காததாலும் கட்டிடங்களின் மேற்கூரைகள் விரிசல்விட்டு மழைத்தண்ணீர்  கீழே இறங்கத் தொடங்கியது.

Traders besiege Chinnalapatti Town Panchayat office

வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போதே  மேற்கூரைகள் விழுந்து வருவதால் வியாபாரிகள் அச்சமடைந்தனர்.  தற்போது  புயல் மற்றும் பருவமழை பெய்து வரும் காலத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் உள்ள  கட்டிடங்களை அரசு இடிந்து வருவதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி  பேரூராட்சி நிர்வாகம் அதிரடியாக நவம்பர் 1ம் தேதி மார்க்கெட்டிற்கு வரும் மூன்று பாதைகளையும் அடைத்துவிட்டது. மார்க்கெட்டிற்கு உள்ளே கடை  போட்டு வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் வெளியேற்றப்பட்டனர்.  இடவசதி இல்லாததால் சாலை ஓரங்களில் காய்கறி கடைகளை போட்டு  வியாபாரிகள் விற்பனை செய்து வந்த நிலையில் 84 நாட்களாக பேரூராட்சி  நிர்வாகம் பழைய மார்க்கெட் கட்டிடத்தை இடிக்காமல் இருப்பதையும், தங்களுக்கு முறையான இடவசதி செய்து கொடுக்காததை கண்டித்து ஊர்வலமாக பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்த   பேரூராட்சித் தலைவர் பிரதீபா கனகராஜிடம் புகார் மனு கொடுத்தனர். அந்த  மனுவில், புதிதாக கட்டிடம் கட்டித் தருவதாக கூறி அண்ணா தினசரி மார்க்கெட்டில் இருந்து எங்களை (வியாபாரிகளை) அப்புறப்படுத்தினீர்கள்.  எப்போது கட்டிடத்தை இடித்துபுதிய கட்டிடம் கட்டுகிறீர்கள் கடும் மழையிலும்,  வெயிலிலும் நாங்கள் திறந்த வெளியில் வியாபாரம் செய்ய வேண்டிய  அவலநிலையில் உள்ளோம். நாய்கள் மற்றும் மாடுகள் தொந்தரவால்  வியாபாரிகள் அவதிப்படுகின்றனர். எங்களுக்கு விரைவாக அண்ணா தினசரி  மார்க்கெட் உள்ள இடத்தில் புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என  கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட பேரூராட்சி மன்றத்  தலைவர் பிரதீபா கனகராஜ் கட்டிடத்தை இடிப்பதற்கு திருச்சி அண்ணா  பொறியியல் கல்லூரி பொறியாளர்களிடம் விண்ணப்பித்துள்ளோம். அவர்கள்  பார்வையிட்டு சென்ற பின்பு கட்டிடத்தை இடித்துவிடுவோம். விரைவில் அந்த  இடத்தில் புதிய கட்டிடம்கட்டிக் கொடுக்கப்படும் என கூறியதையடுத்து வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை விட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அண்ணா தினசரி மார்க்கெட்டை சேர்ந்த  ராஜபாண்டி கூறுகையில், 54 வருடங்களுக்கு மேலாக இங்கு ஒரே குடும்பமாக  சொந்தமான அனைத்து வியாபாரிகளும் வியாபாரம் செய்து வருகிறோம்.  மார்க்கெட் கட்டிடம் இடிந்து விழும் கட்டிடம் சேதமடைந்து இருக்கிறது எனக்கூறி  எங்களை அப்புறப்படுத்திவிட்டு 84 நாட்களாக பேரூராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து இன்று நாங்கள் ஊர்வலமாக வந்து மனு கொடுத்துள்ளோம். அமைச்சர் அண்ணன் ஐ.பெரியசாமி உள்ள ஆத்தூர்  தொகுதியில் நலத்திட்டங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.  சின்னாளபட்டியில் மட்டும் அதிகாரிகளும், கட்சி நிர்வாகிகள் சிலரும் அவருக்கு  அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள். அன்றாடம் கூலி  வேலை செய்யும் எங்கள் வயிற்றில் அடிப்பது போல் கடைகளை  அப்புறப்படுத்திவிட்டு சாலை ஓரம் கடைகளை போட வைத்துள்ளார்கள். இந்த விசயத்தில் அமைச்சர் அவர்கள் தனி கவனம் செலுத்தி அண்ணா தினசரி  மார்க்கெட் காய்கறி வியாபாரிகளுக்கு விரைவாக புதிய கட்டிட  வசதி செய்து  கொடுக்க வேண்டும் என்று கூறினார். 

மார்க்கெட் பெண் வியாபாரி குருவம்மாபாண்டி கூறுகையில், நாங்கள் மிகவும் சிரமத்துடன்தான் வாழ்க்கை நடத்தி வந்தோம். திடீரென  எங்களை மார்க்கெட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்கள். பஞ்சாயத்து போர்டு  ஆட்களை கேட்டால் எந்த ஒரு பதிலும் சொல்வதில்லை. சாலையோரம்  உட்கார்ந்து தான் வியாபாரம் செய்து வருகிறோம் எங்களுக்கு விரைவில்  மார்க்கெட் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறினார். இச்சம்பவம் சின்னாளபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்