Skip to main content

தொழிற்சங்கங்கள் பொதுமக்களின் கோரிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். கே.சுவாமிநாதன் பேச்சு

Published on 02/09/2017 | Edited on 02/09/2017

தொழிற்சங்கங்கள் பொதுமக்களின் கோரிக்கைகளை
முன்னெடுக்க வேண்டும். கே.சுவாமிநாதன் பேச்சு



புதுக்கோட்டை, செப்.1- தொழிற்சங்கங்கள் தங்களின் கோரிக்கைகளைத் தாண்டி பொதுமக்களுக்கான பிரச்சினைகளில் வலுவாகத் தலையிட வேண்டுமென்றார் தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் கே.சுவாமிநாதன். ஆயுள் காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் வியாழக்கிழமையன்று நடைபெற்ற கருத்தரங்கில் ‘தனியாமயமும் ஜிஎஸ்டியும் என்ற தலைப்பில் உரையாற்றிய அவர் பேசியது:

தேசத்தின் ஆதார தொழில் வளர்ச்சிக்கும் சுயசார்பிற்கும் பொதுத்துறை நிறுவனங்கள் மிகப்பெரிய பங்கை ஆற்றி இருக்கிறது. 1991-ஆம் ஆண்டு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் தங்குதடையற்ற முறையில் காலூன்றத் தொடங்கியது. நமது ஆட்சியாளர்கள் பன்னாட்டு நிறுவனங்களின் கதவைத் தட்டியபொழுது உங்கள் நாட்டில் தொழில் தொடங்க வேண்டுமென்றால் எங்களுக்கு வங்கியைத் தருவீர்களா? தொலைத்தொடர்புத்துறையை தருவீர்களா? எல்ஐசியைத் தருவீர்களாக? என்றார்கள். 

நட்டம் வரும் நிறுவனங்களின் பக்கம் அந்நிய முதலீட்டார்கள் வரமாட்டார்கள். சேவை செய்யும் நோக்கமும் அவர்களுக்கு துளியும் கிடையாது. லாபம் ஒன்றே அவர்களின் குறிக்கோளாக இருக்கும். கடந்த 60 ஆண்டுகளில் அரசியல் களம், வணிகக்களம் இரண்டிலும் அவர்கள் வலுவான தலையீட்டை செய்து வருகின்றனர்.

1956-ஆம் ஆண்டு வெறும் 51 லட்ச ரூபாயை அரசு எல்ஐசிக்குத் தந்தது. மேலும், பாலிசிகளுக்கு அரசு உத்தரவாதம் தரும் என்றும் அறிவித்தது. அந்தத் தொகையை எல்ஐசி திரும்பச் செலுத்திவிட்டது. கடந்த 61 ஆண்டுகளில் ஒருமுறைகூட அரசு எல்ஐசிக்கு பணம் கொடுக்கவில்லை. மாறாக, எல்ஐசி அரசுக்கு செய்த கைமாறு அளப்பறியது. உலகத்திலேயே இவ்வளவு பாலிசிகளை எல்ஐசியைத் தவிர வேறு எந்த நிறுவனமும் வைத்திருக்க முடியாது. தற்பொழுது தொலைத் தொடர்புத்துறையில் 8 சதவிகிதத்தை மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனம் வைத்திருக்கிறது. இவ்வளவு போட்டிகளுக்கு மத்தியிலும் இன்சூரன்ஸ் துறையில் 72 சதவிகித பங்குளை எல்ஐசி நிறுவனம் வைத்திருக்கிறது.

ஊழியர்களின் நலனை முன்னிறுத்தி நாம் மக்களிடம் பிரச்சாரம் செய்யவில்லை. பொதுத்துறையை பாதுகாக்கும் அவசியத்தை மக்களிடம் எடுத்துச்சென்றோம். சாலை, மின்சாரம், ரயில் சேவைகளுக்கு எல்ஐசி ஆற்றிய பங்கை எடுத்துரைத்தோம். மக்களின் சேமிப்பு மக்களுக்கே என்று நாம் வைத்த முழக்கம் பொதுமக்களை வெகுவாக ஈர்த்தது. எல்ஐசி பாலிசிகளுக்கு அரசு உத்திரவாதம் என்ற பிரச்சாரத்தை நமது முகவர்கள் மக்களிடம் சிறப்பாக எடுத்துச் சென்றனர். எல்ஐசியை பாதுகாப்பதில் முகவர்களி;ன பங்கு அளப்பரியது. தொழிற்சங்கம் ஊழியர்களின் நலனுக்கானது என்பதைத்தாண்டி தேசத்தின் பாதுகாப்பிற்கு என்ற முழக்கத்தை வருங்காலத்தில் நாம் வலுவாக கட்டமைக்க வேண்டும்.

இந்திய சமூகத்தை புரிந்துகொள்ள முடியாமல் அதன் விளைவுகளைப்பார்க்காமல் மோடி பணமதிப்பு இழப்பு நடவடிக்கை எந்த முன்னறிவிப்பும் இன்றி அறிவித்தார். இதனால், நாட்டு மக்கள் எவ்வளவு சிரமத்தைச் சந்தித்தனர். உசிலம்பட்டியில் குடிகார மகனுக்குத் தெரியாமல் இரண்டு 500 ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்த ஒரு மூதாட்டி வங்கியில் மாற்றுவதற்காக நின்றுகொண்டிருந்தார். இதைக் கேள்விப்பட்ட மகன் வங்கியில் வைத்தே தாயை வெட்டிக்கொன்ற சம்பவம் நடந்தது. நாட்டின் வளர்ச்சிக்கு கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு பொதுமக்கள் சிரமத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றனர். தற்பொழுது கருப்புப் பணத்தை ஒழிப்பது எங்களின் நோக்கமல்ல என்கிறார் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி. 

ஜிஎஸ்டி என்பது புதிய முறைதானே தவிர, அதில் எந்த புதிய அம்சமும் இல்லை. வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட 66 சதவிகிதம் நேரடி வசூல் நடக்கிறது. இந்தியாவில் 34 சதவிதமே நேரடி வசூலாக இருக்கிறது. ஜிஎஸ்டியால் இது மேலும் குறையுமே தவிர கூடப்போதில்லை. இது ஏழை, எளிய மக்களை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கும். இந்தியாவின் கூட்டாட்சி முறையை தகர்க்கும் நடவடிக்கையாகும் என்று பொருளாதார அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இங்கே பசு தேசியம், காலாச்சார தேசியம். விளையாட்டு தேசியம். ஆயுத தேசியம் என வகைப்படுத்துகின்றனர். பன்னாட்டு நிறுவனங்களைப் புறக்கணிக்கும் பொருளாதார தேசியத்தை மட்டும் ஏன் பேச மறுக்கின்றனர். பொதுத்துறையைப் பாதுகாக்க பரந்து விரிந்த மேடையை உருவாக்க வேண்டும். நமது போராட்டங்கள் மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றார்.

-இரா. பகத்சிங்

சார்ந்த செய்திகள்