அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்கள் சார்பில் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்துவதைக் கைவிட வேண்டும். வருமான வரி கட்டுமளவுக்கு வருவாய் ஈட்டாத அனைத்துக் குடும்பங்களுக்கும் மாதம் 7,500 ரூபாய் வீதம் கரோனா நிவாரணம் வழங்க வேண்டும். தேவைப்படும் அனைவருக்கும் ஒரு நபருக்கு 10 கிலோ அரிசி, கோதுமை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமான 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி நகரப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
அனைவருவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்கள் சார்பில் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது.
விவசாயச் சங்கங்கள் அங்கம் வகிக்கும் அகில இந்திய விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, மின் பகிர்மான சங்கத்தினர், போக்குவரத்துக் கழகம் சங்கத்தினர், டாஸ்மாக் சங்கத்தினர், வங்கி அதிகாரிகள் உட்பட பல்வேறு சங்கத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி, சத்தி, அந்தியூர், கொடுமுடி, மொடக்குறிச்சி உள்ளிட்ட வட்டத் தலைநகர்களில் மறியல் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே மறியலுக்குப் பதில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏ.ஐ.டி.யு.சி சின்னசாமி, சி.ஐ.டி.யு சுப்பிரமணியம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதேபோல் பெருந்துறை தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் மறியல் போராட்டம் நடந்தது.
இந்த மறியலில் ஈடுபட்ட 75 -க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் பவானியில், பவானி -மேட்டூர் பிரிவில் நடந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 139 பேர் கைது செய்யப்பட்டனர். அந்தியூரில் மறியலில் ஈடுபட்ட 90 பேர் கைது செய்யப்பட்டனர்.
மொடக்குறிச்சி, கொடுமுடி, சத்யமங்கலம், கோபி போன்ற பகுதிகளில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஒரு சில வங்கி ஊழியர்களும் பங்கேற்றனர். இதனால் இன்று பணப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.