மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த இரு மாதமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் அவர்களது போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் பல்வேறு பகுதிகளில் டெல்லியில் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் பல லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ட்ராக்டர்களுடன் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பேரணி நடத்துகிறார்கள். இதற்காக டெல்லியை நோக்கி லட்சக்கணக்கான விவசாயிகள் ட்ராக்டர்களில் சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு ஆதரவு தெரிவித்தும் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் அதே ஜனவரி 26ஆம் தேதியன்று நாடு முழுக்க விவசாயிகள் அமைப்பு தேசிய கொடியை ஏந்தி அந்தந்த ஊர்களில் வாகனப் பேரணி நடத்துகிறது.
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்கப் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஒன்பது இடங்களில் வாகன பேரணி நடைபெற உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்பாளர் துளசிமணி கூறும்போது, “டெல்லியில் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தைக் காக்க தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாங்களும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். இந்நிலையில் குடியரசு தினவிழாவையொட்டி மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் ட்ராக்டர் பேரணி நடத்த உள்ளார்கள்.
அவர்களுக்கு ஆதரவாக ஈரோட்டில் அனைத்து விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வாகன பேரணிகள் நடத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி ஈரோடு காளைமாடு சிலை, பெருந்துறை, அந்தியூர், சென்னிமலை, சிவகிரி, பவானி, சத்தியமங்கலம், கோபி ஆகிய பஸ் நிலையங்களில் அந்தந்த பொறுப்பாளர்கள் தலைமையில் வாகனப் பேரணி நடைபெறுகிறது.
இந்தப் பேரணியானது முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பஸ் நிறுத்தத்தில் நிறைவடைகிறது. வாகனப் பேரணி முடிவில் இந்திய அரசியல் சாசனத்தைக் காப்போம் என்று உறுதிமொழியை எடுத்துக்கொள்கிறோம்" எனக் கூறினார்.
ஈரோட்டை போலவே கோவை, திருப்பூர், சேலம், மதுரை, தஞ்சை, திருவாரூர், கடலூர், நெல்லை, குமரி என தமிழ்நாடு முழுக்க இந்த வாகன பேரணி நடக்கிறது.