உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ. குருவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அன்புமணி இராமதாஸ் தினமும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைகளை பார்த்து வருகிறார். ராமதாஸ் நேற்றும், நேற்று முன்நாளும் மருத்துவமனைக்கு சென்று குரு அவர்களை பார்த்ததுடன், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் விசாரித்தார்.
அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களுடன் ராமதாஸ், அன்புமணி இராமதாஸ் நடத்திய ஆலோசனையின் போது, குரு அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சுவாசப் பிரச்சினையை தீர்க்க நடு மூச்சுக்குழலில் அறுவை சிகிச்சை செய்து சுவாசிக்கச் செய்யும் டிரக்கியாஸ்டோமி (Tracheostomy) சிகிச்சை செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி அவருக்கு நேற்று பிற்பகலில் டிரக்கியாஸ்டோமி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. மருத்துவர் பாபு மனோகர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர். மருத்துவர் பரத், மருத்துவர் ஜெய்கணேஷ் உள்ளிட்ட மருத்துவர்களும் சில மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையின் போது உடனிருந்தனர்.
டிரக்கியாஸ்டோமி சிகிச்சை காரணமாக குரு மூச்சு விடுவதில் இருந்த சிரமம் பெருமளவில் குறைந்துள்ளது. அவரது உடல்நிலையை முன்னேற்ற மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து தீவிர மருத்துவம் அளித்து வருகின்றனர் என்று பாமக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.