பருத்தி சோளம் வரகு ஆகிய விவசாய பயிர்களுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் உள்ள சிறு முளை, பெரு முளை, வையங்குடி, ஆதமங்கல,ம் சத்த நத்தம், புதுக்குளம், நாவலூர், மருவத்தூர், தொளர், புலிவலம், குமாரை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்து திட்டகுடி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்தாண்டு பெயர் செய்த பருத்தி, மக்காசோளம், வரகு அதிக மழை நீர் தேங்கியதால் பாழாகிவிட்டது. அதன் காரணமாக கடந்த ஆண்டுகளில் ஒரு ஏக்கருக்கு 12 குவிண்டால் பருத்தி கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு இரண்டு குவிண்டால் கூட தேறாது. இதனால் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 22 ஆயிரம் நஷ்டம் ஆகியுள்ளது.
அதேபோல் மக்கா சோளம் பயிரிட்டால் கடந்த ஆண்டுகளில் ஒரு ஏக்கரில் 30 குவிண்டால் சோளம் கிடைக்கும். இந்த ஆண்டு இரண்டு குவிண்டால்தான் கிடைக்கும். இதனால் சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் வரகு பயிரிட்ட விவசாயிகளுக்கு கடந்த ஆண்டுகளில் ஏக்கருக்கு 12 குவிண்டால் கிடைத்தது. இந்த ஆண்டு 3 குவிண்டால் தான் கிடைக்கும். இதனால் ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஆகி உள்ளது.
எனவே மேற்படி பருத்தி, மக்காச்சோளம், வரகு ஆகிய பயிர்களை விவசாயம் செய்து நஷ்டமடைந்த எங்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என விவசாயிகள் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு வட்டாச்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் வெலிங்டன் ஏரி பாசன சங்க தலைவர் மருதாசலம் தலைமையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்கள் பயிர் செய்த நிலங்களை கணக்கெடுத்து உரிய இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என்றனர்.