தஞ்சை - பெற்றோரை தேடும் 5 வயது சிறுமி
கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன் 6 மாதப் பெண் குழந்தையாக இருந்த ஒரு பெண் குழந்தை, தஞ்சை பெரிய கோயில் அருகிலிருந்து குழந்தையை கடத்தி விற்பனை செய்யும் பெண் ஒருவரால் கடத்தி கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், வாண்டூர் காவல் துறையினரால் அந்தப் பெண் குழந்தை 2016-இல் மீட்கப்பட்டது. பின்னர், மலப்புரம் குழந்தைகள் நலக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது குழந்தைகள் இல்லத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளது. அந்த பெண் குழந்தைக்கு யாழினி என்று காப்பக நிர்வாகிகள் பெயர் சூட்டியுள்ளனர்.
முறைப்படி குழந்தையை வேறு தகுதியான் தம்பதியினருக்கு தத்துக் கொடுக்கவோ அல்லது ஆதரவற்றோர் என பிறப்பு சான்றிதல் பதிவேற்றம் செய்ய வேண்டுமானால், அந்த குழந்தை தொலைந்து போன இடத்தில் உள்ள வட்டாட்சியர் மூலமாக சான்று பெறவேண்டும். அதற்காக அந்த குழந்தையை பறிகொடுத்தவர்கள் பற்றிய விபரங்களை பொதுமக்களிடம் தெரிவித்து, அக்குழந்தை குறித்த விபரங்களை பெறக்கோரி கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைதுள்ளனர்.
தஞ்சையில் இருந்து கடத்தப்பட்ட யாழினியின் பெற்றோர் அல்லது உறவினர்கள் யாரும் குழந்தையைத் தவறவிட்டு இருந்தால், அதற்ககான உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு 30 நாள்களுக்குள் தகவல் தெரிவிக்கமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு 0422-2300305 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெ.சிவசுப்ரமணியம்