முசிறி அருகே பக்தர்கள் சென்ற பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில், 21 பேர் காயம் அடைந்தனர்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே மஞ்சகோரை என்ற இடத்தில் ஓசூரில் இருந்து திருநள்ளாறு சனீஸ்வர பகவான் தளத்திற்கு பக்தர்கள் சென்ற சுற்றுலாப் பேருந்து வாய்க்காலில் பாய்ந்து கவிழ்ந்தது.
வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் ஓசூரில் இருந்து திருநள்ளாறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதற்காக 43 பக்தர்கள் சுற்றுலாப் பேருந்தில் பயணித்து வந்துள்ளனர்.
திருச்சி நாமக்கல் சாலையில் முசிறி அருகே மஞ்சகோரை என்ற இடத்தின் அருகே பேருந்து வந்தபோது, சாலையின் இடது புறம் இருந்த வாய்க்காலுக்குள் பேருந்து கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த 21 பேரும் காயம் அடைந்தனர். அதில் 11 பேர் முசிறி அரசு மருத்துவமனைக்கும் 10 பேர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பேருந்து கவிழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. முசிறி அரசு மருத்துவமனையில் ஜெயலட்சுமி, சந்திரன், ஜெகதீஷ் உள்ளிட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.