
கோவையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் 51 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இதற்காக பொதுமக்களுக்கு டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன. தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதால், குறைந்த அளவு மக்களுக்கே தினமும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதன் காரணமாக பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது.
கோவை மாநகரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக தினமும் 100 டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, பல இடங்களில் 60 முதல் 70 பேருக்கு மட்டுமே டோக்கன்கள் வழங்கப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். இதைக் கண்டித்து பொதுமக்கள் மறியலிலும் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், டோக்கன்கள் விநியோகிப்பதில் முறைகேடுகள் ஏற்படுவதால் டோக்கன்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி சுகாதார அதிகாரி ஒருவா் கூறியதாவது, “தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களில் டோக்கன்கள் விநியோகத்தில் தொடர்ந்து குளறுபடிகள் நீடிப்பதால், இந்த நடைமுறை நிறுத்தப்படுகிறது. இதற்குப் பதிலாக, முகாமுக்கு முதலில் வருகின்ற 100 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மற்றவா்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். இதனால், தேவையின்றி மக்கள் கூடுவது தவிர்க்கப்படும்” என்றார்.
இதற்கிடையே தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் நேற்றும் (28.06.2021) இன்றும் தடுப்பூசிகள் செலுத்தும் பணி ரத்து செய்யப்பட்டது. இந்தத் தகவல் தெரியாமல் மக்கள் பலரும் தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பினர்.