தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வருடந்தோறும் லட்சக்கணக்கான முருக பக்தர்கள் முருகனை தரிசிக்க பாதயாத்திரையாக வருவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு வருகிற 18 ஆம் தேதி தைப்பூசம் நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் உள்ள காரைக்குடி, தேவகோட்டை, அறந்தாங்கி, மதுரை, தேனி, திருச்சி, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர், தாராபுரம், திண்டுக்கல் உள்படப் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசித்து விட்டு சென்ற வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில் கரோனா தொற்று காரணமாக ஏற்கனவே வாரத்தின் கடைசி மூன்று நாட்கள் (வெள்ளி, சனி,ஞாயிறு) வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அப்படி இருந்தும் தைப்பூசத்திற்காக முருக பக்தர்கள் பழனிக்கு சென்ற வண்ணம் இருந்தனர். இந்நிலையில் கரோனா தொற்று தீவிரமடைந்து வருவதையொட்டி தமிழக அரசு 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி இல்லை என அறிவித்தது.
இது முருக பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு 18ம் தேதி நடக்க இருந்த தைப்பூசத் திருவிழாவுக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
அதனால் அதற்கு முன்பாகவே முருகனை தரிசித்து விட்டு வந்து விடலாம் என்ற நோக்கத்தில் பாதயாத்திரையாகவும், பேருந்துகளிலும் பக்தர்கள் தொடர்ந்து பழனி முருகனை தரிசிக்க வருகிறார்கள். இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. முருக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருகனை தரிசித்து சென்ற வண்ணம் இருக்கிறார்கள்.
இன்று 13ஆம் தேதி ஒரு நாள் மட்டுமே முருகனை தரிசிக்க முடியும் என்பதால் முருக பக்தர்கள் படிபாதை மற்றும் ரோப், விஞ்சுகளில் மலைக்கு சென்று பல மணிநேரம் காத்துக்கிடந்து முருகனை தரிசித்து விட்டு வருகிறார்கள். அதுபோல் அடிவாரம் மற்ற பகுதிகளிலும் முருக பக்தர்கள் மலை ஏறுவதற்கு காத்து கிடப்பதால் பழனி நகரமே முருக பக்தர்களின் வெள்ளத்தில் ஸ்தம்பித்திருக்கிறது.