
தமிழகத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பொழிந்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் நிவாரண உதவி கோரப்பட்டிருந்தது. அதனடிப்படையில் மத்தியக் குழு தமிழகம் வந்து வெள்ளம் பாதித்த இடங்களை ஆய்வு செய்யும் என திமுக எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்திருந்தார். அதேபோல் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன், ''தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்களையும் சேர்த்து முடிந்த அளவிற்கு அதிகமான நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுப்போம்'' எனக் கூறியிருந்தார்.
மத்தியக் குழு 2 நாட்கள் தமிழகத்தில் வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று சென்னை வர இருக்கின்றனர் மத்திய குழுவினர். மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழு டெல்லியிலிருந்து வருகிறது. குழு உறுப்பினர்கள் இரு பிரிவாகப் பிரிந்து வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் நாளை முதல் இரண்டு நாட்கள் ஆய்வு செய்வார்கள். நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், குமரி மாவட்டத்திலும், 23ஆம் தேதி கடலூர், தஞ்சை, வேலூர், ராணிப்பேட்டையிலும் ஆய்வு நடைபெறும். நாளையும், நாளை மறுநாளும் ஆய்வு நடத்தும் குழுவினர் நவம்பர் 24ல் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இதுகுறித்து ஆலோசிக்க இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.