தமிழகத்தில் காலியாக உள்ள கோட்டாட்சியர், வணிகவரி உதவி ஆணையர், தீயணைப்பு அலுவலர் போன்ற 66 பணியிடங்களுக்கான குரூப்- 1 முதல்நிலை தேர்வு மாநிலம் முழுவதும் இன்று (03/01/2021) நடைபெறுகிறது.
காலை 10.00 மணிக்கு முதல்நிலை தேர்வு தொடங்கும் நிலையில் 09.15 மணிக்கே தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் வர வேண்டும். OMR தாளில் விடையைக் குறிப்பதற்கு கருப்பு நிற பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வறைக்குள் நுழைந்தவுடன் தேர்வர்கள் தங்கள் கைரேகையைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். விடைத்தாளில் தெரியாத கேள்விகளுக்கு 'E' கட்டத்தை 'Shade' செய்ய வேண்டும். விடையளித்த மொத்த கேள்விகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட வேண்டும் உள்ளிட்ட புதிய நடைமுறைகள் இன்றைய தேர்வில் அமல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் இன்று (03/01/2021) நடக்கும் குரூப்- 1 முதல்நிலை தேர்வில் மாநிலம் முழுவதும் சுமார் 2 லட்சம் பேர் கலந்துக் கொள்கிறார்கள். குரூப்-1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுபவர்கள் 3 தாள்கள் உள்ளடக்கிய மெயின் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5- ஆம் தேதி நடக்கவிருந்த குரூப்- 1 முதல்நிலை தேர்வு கரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இன்று (03/01/2021) நடக்கிறது.